“தமிழக மக்களின் கனவு என்னவென்று கேட்கும் முதலமைச்சருக்கு, நானே அந்தப் பட்டியலைத் தருகிறேன்” என நயினார் நாகேந்திரன் அதிரடியாகத் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், கடந்த நான்கரை ஆண்டுகளாகத் தூக்கத்தில் இருந்த முதலமைச்சர் இப்போதுதான் விழித்திருப்பதாகக் கிண்டல் செய்துள்ளார். தமிழக மக்களின் உண்மையான கனவு என்பது கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் இல்லாத, சட்டம்-ஒழுங்கு சீராக இருக்கும் ஒரு மாநிலம்தான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசுத் துறைகளில் ஊழல் இல்லாத, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்புமிக்க ஒரு சூழலையே மக்கள் எதிர்பார்ப்பதாகக் கூறிய அவர், வெற்று விளம்பரங்களால் மக்களை ஏமாற்றாமல், கொடுத்த வாக்குறுதிகளை (கல்வி கடன் தள்ளுபடி, சிலிண்டர் விலை குறைப்பு) நிறைவேற்றும் அரசே மக்களின் கனவு எனச் சாடியுள்ளார்.
மேலும், “இந்து மத வெறுப்பு இல்லாத, மாற்றுக் கருத்து சொல்பவர்களை ஒடுக்காத ஒரு நிர்வாகமே தமிழகத்திற்குத் தேவை. சுருக்கமாகச் சொன்னால், ‘திமுக இல்லாத தமிழகம்’ அமைய வேண்டும் என்பதே மக்களின் ஒட்டுமொத்த கனவு; அது விரைவில் நிறைவேறும்” என நயினார் நாகேந்திரன் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.