முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தற்போது அதிமுகவிலும் இடமில்லாமல், பாஜக கூட்டணியிலும் இல்லாத ஒரு இக்கட்டான சூழலில் இருக்கிறார். தென் தமிழகத்தில் செல்வாக்கு மிக்க முக்குலத்தோர் சமூக வாக்குகளைப் பிரிக்கும் சக்தி அவருக்கு இருப்பதால், திமுக மற்றும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய இரு தரப்புமே அவரைத் தங்கள் பக்கம் இழுக்க ஆர்வம் காட்டுகின்றன. ஆனால், திமுகவில் இணைந்தால் அது அவரது பழைய அரசியல் அடையாளத்தை அழித்துவிடும் என்றும், விஜய்யின் கட்சியில் இணைவது அவரது சீனியாரிட்டிக்கு அழகல்ல என்றும் அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.
இந்தச் சூழலில், யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்பதற்காக, வரும் ஜனவரி 17-ஆம் தேதி எம்.ஜி.ஆர் பிறந்தநாளன்று பன்னீர்செல்வம் புதிய கட்சி தொடங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படித் தனிக்கட்சி தொடங்கிவிட்டு, விஜய்யின் தவெக-வுடன் கூட்டணி அமைக்கவே அவர் அதிகம் விரும்புவதாகத் தெரிகிறது. இதன் மூலம் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசிகளைத் தன் பக்கம் ஈர்க்க முடியும் என்று அவர் நம்புகிறார். இதையே அவர் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்று சூசகமாகக் குறிப்பிட்டுள்ளார்.