வங்கதேசத்தில் நிலவும் பதற்றமான சூழல் மற்றும் இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே விரிசல் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக, ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியில் 9.20 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் அதிரடியாக நீக்கப்பட்டார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, வரும் பிப்ரவரி 7-ம் தேதி இந்தியாவில் தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் நாங்கள் விளையாட மாட்டோம் என்றும், எங்கள் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்றும் ஐசிசியிடம் (ICC) வங்கதேச கிரிக்கெட் வாரியம் பிடிவாதம் பிடித்து வருகிறது.
இந்தச் சூழலில், இந்தியாவின் முன்னணி விளையாட்டு உபகரண தயாரிப்பு நிறுவனமான எஸ்ஜி (SG – Sanspareils Greenland), வங்கதேச வீரர்களுக்கு வழங்கி வந்த ஸ்பான்ஷர்ஷிப்பை அதிரடியாக ரத்து செய்துள்ளது. குறிப்பாக வங்கதேச டி20 கேப்டன் லிட்டன் தாஸுடனான ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கப் போவதில்லை என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இவரைத் தொடர்ந்து முன்னாள் கேப்டன் மொமினுல் ஹக், யாசீர் அலி ராபி ஆகிய வீரர்களும் இந்த ஸ்பான்ஷர்ஷிப் இழப்பால் சிக்கலில் சிக்கியுள்ளனர். விளையாட்டு உபகரணங்களுக்கு இந்தியாவையே அதிகம் நம்பியிருக்கும் வங்கதேசத்திற்கு, எஸ்ஜி நிறுவனத்தின் இந்த முடிவு ஒரு பெரிய ‘செக்’ வைத்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது.