தெருநாய்கள் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து கையிலெடுத்துள்ள வழக்கு விசாரணை நேற்று மீண்டும் நடைபெற்றது. விசாரணையின் போது, 'ஒரு விலங்கின் நடத்தையை கணிப்பதோ அல்லது ஒரு நாய் 'கடிக்கும் மனநிலையில்' இருக்கிறதா என்பதை அறிவதோ சாத்தியமற்றது' என்று உச்ச நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டு இருந்தது.
இந்நிலையில் இந்தக் கருத்துக்கு எதிராக, "ஆண்களின் மனதையும் கணிக்க முடியாது, அவர்கள் எப்போது குற்றம் செய்வார்கள் என்று தெரியாது, அதற்காக எல்லா ஆண்களையும் சிறையில் அடைக்க முடியுமா?''என நடிகை திவ்யா ஸ்பந்தனா கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளதாவது:

"ஒரு ஆணின் மனதையும் படிக்க முடியாது; அவன் எப்போது பாலியல் வன்கொடுமை/கொலை செய்வான் என்று தெரியவில்லை, எனவே எல்லா ஆண்களையும் சிறையில் அடைக்கலாமா?" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இந்த ஒப்பீடு இணையத்தில் பெரும் விவாதத்தையே தூண்டியுள்ளது. பலரும் இந்த ஒப்பீடே முதலில் தவறு எனக்கூறி வருகின்றனர்.
தமிழில் 'குத்து', 'பொல்லாதவன்', 'வாரணம் ஆயிரம்' போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் நடிகை திவ்யா ஸ்பந்தனா (ரம்யா). தற்போது தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான AppleBox Studios மூலம் படத் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். விலங்கு நல ஆர்வலரான இவர், தொடர்ந்து சமூக வலைதளங்களில் சமூகப் பிரச்சினைகள் மற்றும் பெண்களுக்கான உரிமைகள் குறித்து தனது கருத்துகளை துணிச்சலாகப் பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நடிகை மற்றும் தயாரிப்பாளரான இவர், அரசியல்வாதி ஆவார். கர்நாடக மாநிலம் மாண்டியாவிலிருந்து மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.