தாய், தந்தை அரவணைப்பின்றி பாட்டியால் வளர்க்கப்படுகிறார் ராஜூ (பிரபாஸ்). பாட்டி கங்கம்மாவுக்கு (சரினா வாகப்) ராஜூ மட்டுமேதான் உலகம்.
கங்கம்மா, நீண்ட வருடங்களுக்கு முன்பு காணாமல் போன கணவரின் பற்றிய நினைவுகளிலேயே மூழ்கிக் கிடக்கிறார். அனைத்தையும் மறந்துவிடும் கங்கம்மாவால், இந்த நினைவுகளிலிருந்து மட்டும் மீள முடியவில்லை. பாட்டியின் நிலைமையைக் கண்டு கவலைப்படும் பேரன், திடீரென தனது தாத்தா போன்றொருவரை ஒரு போட்டோவில் காண்கிறார்.
அதைத் தொடர்ந்து தாத்தாவைத் தேடிக் கண்டுபிடிக்கப் புறப்படுகிறார் ராஜூ. காவல் துறையினர், அங்குச் சந்திக்கும் பெண், தாத்தாவைப் பற்றித் தெரிந்தவர்கள் பகிரும் தகவல்களை வைத்து தாத்தாவைத் தேடி, ஒரு பாழடைந்த அரண்மனைக்குச் செல்கிறார்.
அங்குத் தனது தாத்தாவைக் கண்டுபிடித்தாரா, அங்கு நிகழும் திகில் ஆட்டங்கள் என்ன, உண்மையிலேயே ராஜுவின் தாத்தா எத்தகையவர் என்பதை நீண்ட வழித் தடத்தில் பயணித்துச் சொல்கிறது இயக்குநர் மாருதியின் இந்த ஹாரர் காமெடி படைப்பு.
கலகல இளைஞராக, பாட்டியிடம் பாசக்காரராக, காதலிகளிடம் சேட்டைக்காரராக, பழிதீர்க்கும் கோபக்காரராக, இந்த கமர்ஷியல் படைப்புக்குச் சகல விஷயங்களிலும் பொருந்தி, தனியொருவனாகக் கரை சேர்கிறார் பிரபாஸ். (அப்ப மற்றவை?!)
அளவு, கலர் எனக் கதாபாத்திர தன்மையில் எதையும் மாற்றாமல் அதே ரக்கட் வில்லன் கதாபாத்திரத்தில் வந்து மந்திரம் சொல்லும் சஞ்சய் தத், நடிப்பில் மாயாஜாலங்கள் நிகழ்த்தாதது ஏனோ! சில ஹாரர் காட்சிகளில் மட்டும் அவருடைய டெரர் லுக் அச்சமூட்டுகிறது. நான்கு ரொமான்ஸ் காட்சிகள், இரண்டு பாடல்களில் நடனம் மட்டுமே அனைத்து நாயகிகளுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் வேலை.
The Raja Saab Review
அதில் மாளவிகா மோகனன் மட்டுமே பாஸ் மார்க் வாங்குகிறார். மற்ற நாயகிகளான நிதி அகர்வால், ரித்தி குமார் நினைவில் தங்காமலேயே கடந்து போகிறார்கள். அழுத்தமான காட்சிகள் அமைக்காமல், வெறும் க்ளாமர் எபிசோடுகளுக்கு மட்டுமே நாயகிகள் மூவரையும் பயன்படுத்தி வீணடித்திருக்கிறார் இயக்குநர். பாட்டியாக வரும் சரினா வாகப், சென்டிமென்ட், காமெடி காட்சிகளுக்குக் குறிப்பிடத்தக்கப் பங்காற்றியிருக்கிறார்.
OTT Corner: Pluribus, Goodbye June, The Great Floodமுதல் பாதியில் கலர்ஃபுல் ரங்கோலியாக வர்ணஜாலம் நிகழ்த்தும் ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி, இரண்டாம் பாதிக்கு டார்க் டோன் தந்து திகில் விஷயங்களுக்குத் துணை நிற்கிறார்.
கதைக்குள் நெருங்கவே நேரமெடுக்கும் முதல் ஒரு மணி நேரம், நீண்....டுகொண்டே போகும் 'சர்வைவர்' க்ளைமேக்ஸ் போன்றவற்றைப் படத்தொகுப்பாளர் கண்டும் காணாமல் கடந்திருப்பது பார்வையாளர்களைச் சோதிக்கும் திகில் விளையாட்டு.
The Raja Saab Review
பாடல்களில் 'ரிபெல் சாப்' என்ற தொடக்கப் பாடலில் மட்டும் தமனின் பீட்கள் திருவிழாப் பட்டாசாக வெடிக்கின்றன. மற்ற பாடல்கள் ஓகே ரகமாக இருந்தாலும், அது இந்தக் களத்திற்குத் துளியும் தேவைப்படாத ஒன்று!
பின்னணி இசையில் தமனின் ஆஸ்தான அதிரடி டிரம்ஸ் பீட் மிஸ்ஸிங்! க்ளைமாக்ஸில் காட்சிகளை வலிமையாக்கிக் காட்டுவதற்கு அமைத்திருக்கும் இசையிலும் உயிர் இல்லாதது ஏமாற்றமே.
அனிமேஷன் வடிவில் துருத்திக் கொண்டே நிற்கும் கிராபிக்ஸ் காட்சிகள், அரண்மனை செட்டில் இல்லாத கச்சிதம் ஆகிய தொழில்நுட்ப விஷயங்களில் நேர்த்தியான வெளிப்பாடுகள் இல்லாதது இந்த மெகா பட்ஜெட் படத்தின் மைனஸ்கள்.
சிறை விமர்சனம்: தடதடக்கும் த்ரில்லர், ஆழமான உணர்வுகள் - நம் அகத்தைச் சிறைபிடிக்கும் நல்லதொரு சினிமா!தாத்தாவைத் தேடும் பேரனின் கதையை அனைத்து வகையான கமர்ஷியல் மசாலாக்களையும் எடுத்து, ஹாரர் அவியலில் கலந்து சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் மாருதி.
ஆனால், அதில் முட்டி மோதி கால்வாசிக் கிணற்றை மட்டுமே தாண்டியிருக்கிறார். காமெடிகள் ஓரிரு இடங்களில் கிச்சு கிச்சு மூட்டினாலும், பெரும்பான்மையான இடங்களில் சிரிப்பொலி என நினைத்து நிகழ்த்தப்பட்டிருக்கும் காட்சிகள் பெரும் சுமைகளைத் தரும் சோதனைக் கற்கள்.
முதல் பாதி திரைக்கதை, தேவையின்றி எக்கச்சக்க 'ஹேர்பின்' வளைவுகளில் வளைந்த பின், மிகப் பொறுமையாகக் கதைக்குள் செல்வது, தலைச்சுற்றலோடு பெரும் அயர்ச்சியை உண்டாக்குகிறது ராஜா சாப்!
மூன்று கதாநாயகிகள், அவர்களுடன் கதாநாயகன் செய்யும் ரொமான்ஸ், அவர்களுடனான டூயட் பாடல்கள் ஆகியவை திரைக்கதையோடு பொருந்தாத ஒன்றாகக் கடைசி வரை தத்தளிக்கின்றன.
அரண்மனைக்குள் குடியிருக்கும் பேய், அதற்குப் பின்னுள்ள ஃப்ளாஷ்பேக், அங்கு நடக்கும் திகில் கேம்கள் ஆகியவற்றில் பழங்காலப் பேய்ப் படங்களின் சுவடுகளே நிரம்பியிருக்கின்றன.
நாயகனின் வீர தீரச் செயல்களை நிரூபிக்கும் 'வாழ்வா - சாவா' க்ளைமாக்ஸும் ஒரு வட்டத்திற்குள்ளாகவே ரவுண்டு அடித்துச் சலிப்பினை உண்டாக்குகிறது. அதிலும் முதலையுடனான 'சிங்கிள்ஸ்' சண்டையெல்லாம் டூ மச் சாப்!
இரண்டாம் பாதியில் சொல்லப்படும் ஹிப்னாடிஸம் விஷயங்களில் முழுமையும், தெளிவான கதைசொல்லலும் இல்லாதது பல்வேறு குழப்பமான கேள்விகளை எழுப்புகின்றன. அத்தோடு, இந்த டோலிவுட் சினிமா எழுப்பும் லாஜிக் கேள்விகளும் கொஞ்சம் நஞ்சம் இல்லை பாஸ்!
புது `பேய்'களின் கதையை, கமர்ஷியல் விஷயங்களின் புது`மை' தொட்டு எழுதியிருந்தால் இந்த ராஜா சாப் அரியணை ஏறியிருப்பார்.