ஹைதராபாத் மல்காஜ்கிரி அரசு கல்லூரியில் படிக்கும் 19 வயது மாணவி வர்ஷினி, ஒரு நாள் கல்லூரிக்குத் தாமதமாக வந்துள்ளார். இதற்காக விரிவுரையாளர்கள் அவரை வகுப்பிற்குள் அனுமதிக்காத நிலையில், தான் மாதவிடாய் காலத்தில் இருப்பதால் உடல்நலக் குறைவால் தாமதம் ஏற்பட்டதாக வர்ஷினி கூறியுள்ளார். ஆனால், அந்த விரிவுரையாளர் அதனை நம்பாமல், அதற்கு ஆதாரம் கேட்டு சக மாணவர்கள் முன்னிலையில் வர்ஷினியை கடுமையாக இழிவுபடுத்தி “நடிக்கிறாய்” என்று திட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் செயலால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான வர்ஷினி, அழுதுகொண்டே வீட்டிற்குச் சென்றுள்ளார். வீட்டிற்குச் சென்றவுடனேயே அவர் மயங்கி விழுந்த நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மூளையில் ஏற்பட்ட ரத்த உறைவுதான் உயிரிழப்புக்குக் காரணம் என்று மருத்துவர்கள் கூறினாலும், பேராசிரியரின் அவமானமான பேச்சும் அதனால் ஏற்பட்ட அதீத மன அழுத்தமுமே தன் மகளின் மரணத்திற்கு காரணம் எனப் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். ஒரு பெண் தன் ஒழுக்கம் முதல் மாதவிடாய் வரை அனைத்திற்கும் இந்தச் சமூகத்தில் இன்னும் ஆதாரம் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டியிருப்பது எவ்வளவு பெரிய அவலட்சணம்!