“திமுக அரசு எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறது என்பதே முதலமைச்சருக்குத் தெரியவில்லை” என அண்ணாமலை கடுமையாகச் சாடியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “யார் எதை எழுதிக் கொடுத்தாலும், அதை அப்படியே மேடையில் வாசிப்பது மட்டுமே முதலமைச்சரின் வேலையாக இருக்கிறது. புள்ளிவிவரங்களில் இவ்வளவு குளறுபடியா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
வாக்குறுதிகள் குறித்து முதலமைச்சரின் முரண்பட்ட பேச்சுகளைச் சுட்டிக்காட்டிய அண்ணாமலை, “கடந்த 2023 செப்டம்பரில், 99% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாகக் கூறினார்.
கடந்த வாரம், அது 72% ஆனது. இன்று, 80% வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம் எனக் கூறுகிறார். உண்மையில் எத்தனை சதவீதத்தை நிறைவேற்றினார்கள் என்பதில் அவருக்கே தெளிவில்லை” எனக் குற்றம் சாட்டினார்.
மேலும், “மக்களை ஏமாற்றும் வகையில் போலியான புள்ளிவிவரங்களை அடுக்குவதை நிறுத்திவிட்டு, தேர்தல் களத்தில் மக்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயாராகுங்கள்” என அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.