மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞரான சோனு, ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண் அழைத்ததாக நம்பி அவரைச் சந்திக்க ராஜஸ்தான் சென்ற சோனுவுக்கு அங்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பெண்ணின் குடும்பத்தினர் அவரை ஒரு இருட்டறையில் அடைத்து வைத்து, மூன்று நாட்களாகக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், மனிதத் தன்மையற்ற முறையில் சிறுநீரைக் குடிக்க வைக்கும் கொடூரத்தையும் அரங்கேற்றியுள்ளனர். இந்தத் தாக்குதல் முழுவதையும் வீடியோவாகப் பதிவு செய்து, பயத்தை ஏற்படுத்துவதற்காக சோனுவின் குடும்பத்தினருக்கே அனுப்பியுள்ளனர்.
இந்த வீடியோவைக் கண்டு அதிர்ச்சியடைந்த சோனுவின் குடும்பத்தினர் உடனடியாகப் காவல்துறையில் புகார் அளித்தனர். முதற்கட்ட விசாரணையில், அந்தப் பெண் ஏற்கனவே சோனுவுடன் போபாலில் தங்கியிருந்ததும், பின்னர் குடும்பத்தினர் வற்புறுத்தலால் ஊருக்குத் திரும்பியதும் தெரியவந்தது. குடும்பத்தினர் திட்டமிட்டே அப்பெண்ணின் மூலம் சோனுவை வரவழைத்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். தற்போது மத்திய பிரதேச காவல்துறையினர் ராஜஸ்தான் விரைந்துள்ள நிலையில், குற்றவாளிகளை அடையாளம் காணும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.