அப்போ ஈரானுக்கு அடி உறுதியா.!? வளைகுடா விரையும் மற்றொரு பிரமாண்ட அமெரிக்க போர்க்கப்பல்; பதற்றம்
ஸ்ரீராம் ஆராவமுதன் February 14, 2026 04:14 PM

அமெரிக்கா-ஈரான் இடையேயான பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார். நேற்று கூட அவர் எச்சரித்த நிலையில், மத்திய கிழக்கு நோக்கி மற்றொரு பிரமாண் அமெரிக்க போர்க்கப்பலான ஜெரால்ட் ஆர் போர்டு விரைவதாக தகவல் வெளியாகியுள்ளதால், பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

ஈரானில் வெடித்த உள்நாட்டு கலவரம்

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால், விலைவாசிகளும் தொடர்ந்து உயர்ந்ததால், பொதுமக்கள் காமேனியின் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். அந்த போராட்டத்தை அரசு ராணுவப் படையை கொண்டு அடக்க முயன்றதால், அது கலவரமாக மாறியது. அதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பலியோனோரின் சரியான எண்ணிக்கையையும் ஈரான் அரசு வெளியிடாமல் உள்ளது. இதனால், அந்நாட்டில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது.

ஈரானை தொடர்ந்து எச்சரித்து வரும் ட்ரம்ப்

இந்நிலையில், ஈரானில் போராடிவரும் மக்களுக்கு ஆதரவாக பேசிய ட்ரம்ப், அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்றும் தொடர்ந்து போராடுமாறும் வலியுறுத்தினார். மறுபுறம், காமேனி அரசுக்கு கடுமையான எச்சரிக்கையும் விடுத்தார். அங்கு அப்பாடி மக்களை கொன்றால், ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்தார்.

தொடர்ந்து பலமுறை எச்சரித்து வரும் ட்ரம்ப், ஈரான் அணுசக்தி திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு ஒப்பந்தத்திற்குள் வர வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தார். இதையடுத்து, பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதும், இன்னும் முடிவு எட்டப்படவில்லை. இந்த சூழலில், நேற்று இஸ்ரேல் பிரமர் நெதன்யாகு உடனான சந்திப்புக்குப் பிறகு பேசிய ட்ரம்ப், ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும், அப்படி செய்யாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார். மேலும், மத்திய கிழக்கிற்கு இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பலை அனுப்ப இருப்பதாகவும் கூறி பீதியை கிளப்பினார்.

மத்திய கிழக்கிற்கு விரையும் பிரமாண்ட அமெரிக்க போர்க்கப்பல்

இந்நிலையில், போர்க்கப்பலை அனுப்புவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியதைத் தொர்ந்து, அடுத்த சில மணி நேரங்களிலேயே, அமெரிக்காவின் மற்றொரு சக்திவாய்ந்த பிரமாண்ட விமானம் தாங்கி போர்க்கப்பலான ஜெரால்ட் ஆர் போர்டு, மத்திய கிழக்கை நோக்கி நகரத் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, அமெரிக்காவின் அதிநவீன விமானம் தாங்கி போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் ஈரானுக்கு அருகிலேயே, அரேபிய கடல் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அதன் மீது தாக்குதல் நடத்த முயன்ற ஈரான் ட்ரோனையும் சமீபத்தில் அவர்கள் சுட்டு வீழ்த்தினர். இந்த நிலையில், தற்போது மேலும் ஒரு பிரமாண்ட போர்க்கப்பல் அப்பகுதியை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதால், அங்கு போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் மீது தாக்குதல் உறுதியா.?

ஒருபுறம் ஈரான் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது. சமீபத்தில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அங்கு நடைபெற்ற முக்கியமான நிகழ்வு ஒன்றை தவிர்த்து பாதுகாப்பாக இருப்பதாக கூறப்பட்டது.

மறுபுறம், ஈரானுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வரும் ட்ரம்ப், தற்போது கூடுதல் போர்க்கப்பலையும் அங்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால், ஒருவேளை ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதன் காரணமாக, மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.