நிதிஷ் குமார் பதவியை ராஜினாமா செய்ய முடிவு; பீஹாரின் முதல் பாஜக முதல்வர் யார்.?
Seithipunal Tamil March 05, 2026 10:48 AM

பீஹார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு மாநிலங்களவை எம்.பி. சீட் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் ஆவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு நிதிஷ் பதவி விலகினால் பாஜகவைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக பதவியேற்பார் என்றும், நிதிஷ் குமாரின் மகனான நிஷாந்த் குமார் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.

கடந்த 2025ஆம் ஆண்டு பீகாரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில்  ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. சுமார் 243 தொகுதிகள் கொண்ட பீகாரில் 202 தொகுதிகளை வென்று என்.டி.ஏ. கூட்டணி ஆட்சியைப் மீண்டும் கைப்பற்றியது.

அதனை தொடர்ந்து, மேலவை உறுப்பினரான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகாரின் நெடுநாள் முதலமைச்சருமான நிதிஷ் குமார் மீண்டும் மாநிலத்தின் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். பாஜகவின் சாம்ராட் சௌதரி மற்றும் விஜய் குமார் ஆகியோர் துணை முதலமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு, பீகார் உள்ளிட்ட நாடு முழுவதும் 37 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் நிறைவடைகின்ற நிலையில், வரும் 16ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், பீகார் மாநிலத்தின் முதலமைச்சரான நிதிஷ் குமார் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

75 வயதான நிதிஷ் குமார் மாநிலங்களவைக்கு மாறும் நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்வார். அவ்வாறு ஆவர் ராஜினாமா செய்யும் நிலையில், மாநிலத்தின் முதலமைச்சராக துணை முதலமைச்சர்களாக இருக்கும் பாஜகவின் சாம்ராட் சௌதரி மற்றும் விஜய் குமார் ஆகியோரில் ஒருவர் மாநிலத்தின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படலாம் எனச் கூறப்படுகிறது.

அத்துடன், இதுவரை அரசியலில் ஈடுபடாமல் இருந்து வந்த நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார், தற்போது தீவிர அரசியலில் இறங்கி யுள்ளதாக அம்மாநில அமைச்சரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவருமான ஷ்ரவன் குமார், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் நிதிஷ் குமார், தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மாநிலங்களவைக்கு செல்வதும், அவரது மகன் நிஷாந்த் குமாரின் அரசியல் வருகையும் அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகியுள்ளது.

அதே நேரத்தில் பீஹாரின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஒருவேளை பாஜகவைச் சேர்ந்த துணை முதலமைச்சர்களில் ஒருவர் அந்தப் பதவியை ஏற்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமாருக்கு எந்த பதவி கிடைக்கும் எனவும் கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுகையில்; பாஜக துணை முதலமைச்சர்களில் ஒருவர் மாநிலத்தின் முதலமைச்சராக மாற்றப்படுவார். நிதிஷ் குமாரின் மகனாக இருந்தாலும், புதிதாக அரசியலுக்கு வருவதால் அவருக்கு துணை முதலமைச்சர் பதவியே வழங்கப்படும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

பாஜகவைச் சேர்ந்த துணை முதலமைச்சர்களில் ஒருவர் முதலமைச்சராக பதவி ஏற்கிறார்கள் என்றால், அது பீகார் அரசியல் வரலாற்றில் முதல் பாஜக முதலமைச்சர் எனும் பெயர் வரும் என்ற வரலாறு உருவாகும் என்று சொல்லப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.