முடிவுக்கு வரும் மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரம்? DNA சோதனை நடத்த ஐகோர்ட் உத்தரவு..!
Top Tamil News March 05, 2026 11:48 AM

சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, சமூக வலைதளங்களில் பதிவிட்ட பதிவுகளில், மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தையும் இணைத்திருந்தார்.

இதை எதிர்த்து மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக, மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசில்டா இடையில் மத்தியஸ்தம் செய்ய உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி பி.என்.பிரகாஷை நியமித்தது.

இந்த வழக்கு விசாரணையின் போது, தனது குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் என நிரூபிக்க, அவருக்கு மரபணு சோதனை நடத்தப்பட வேண்டும் என ஜாய் கிரிசில்டா தரப்பிலும், மரபணு சோதனைக்கு தயார் என மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.

இது சம்பந்தமாக மனுவாக தாக்கல் செய்யும்படி நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்த போது, ஜாய் கிரிசில்டா மற்றும் மாதம்பட்டி தரப்பில் மரபணு பரிசோதனை நடத்த அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டார். மேலும், சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள தடயவியல் துறையையும், ஆய்வகத்தையும் தொடர்பு கொண்டு, மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, வழக்கறிஞர் ஆணையரை நியமித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மரபணு பரிசோதனைக்கு பின், அறிக்கையைப் பெற்று, அதனை மத்தியஸ்தரிடம் சமர்ப்பிக்கும்படி வழக்கறிஞர் ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை மார்ச் 30 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.