அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் கொள்கைத் தலைவர், அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டது இஸ்ரேலின் நடவடிக்கையால் தான் என்று நேற்று முன்தினம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், இந்த விஷயத்தில் ட்ரம்ப் பொய் கூறியுள்ளது அம்பலமாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய தேசிய பாதுகாப்பு உத்தியை ஆதரித்து, செனட் ஆயுத சேவைகள் குழுவின் முன் சாட்சியமளித்த பென்டகன் கொள்கைத் தலைவர் எல்பிரிட்ஜ் கோல்பி, பிராந்தியத்தில் அமெரிக்க துருப்புக்களை பாதுகாப்பதிலும், அதன் ஏவுகணை, ட்ரோன் மற்றும் கடற்படை திறன்களை கட்டுப்படுத்துவதிலும் தான் அமெரிக்காவின் கவனம் இருந்தது என்று கூறியுள்ளார்.
மேலும், கமேனி மற்றும் பிற மூத்த ஈரானிய தலைவர்களின் கொலை, அமெரிக்க ராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக இல்லை என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ள அவர், அவை இஸ்ரேலிய நடவடிக்கைகள் என்று கூறியுள்ளார். ஆட்சி மாற்றம் அமெரிக்க நடவடிக்கையின் நோக்கமா என்பது குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்தபோது அவர் பதிலளிக்கவில்லை.
கோல்பியின் இந்த கருத்துக்கள், இரண்டு நாட்களுக்கு முன்பு ட்ரம்ப் கூறிய கருத்துக்கு முரணாக அமைந்துள்ளது. அதாவது, "அவர் என்னைப் பிடிப்பதற்கு முன்பே அவரை பிடித்துவிட்டேன்" என்று கமேனியின் கொலை குறித்து திங்களன்று கூறிய ட்ரம்ப், அலி கமேனி தன்னை இரண்டு முறை கொல்ல முயன்றதாகவும், கமேனியை முதலில் கொன்றதில் மகிழ்ச்சி அடைந்ததாகவும் கூறியதாக ஏபிசி நியூஸ் தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஏபிசி நியூஸின் தலைமை வாஷிங்டன் நிருபர் ஜோனாதன் கார்லுடனான தொலைபேசி அழைப்பின் போது ட்ரம்ப் இவ்வாறு கூறியுள்ளார். அது குறித்து தனது எக்ஸ் தள பக்கதில் பகிர்ந்துள்ள கார்ல், "அவர் என்னைப் பிடிப்பதற்கு முன்பு நான் அவரைப் பிடித்தேன். அவர்கள் இரண்டு முறை முயற்சித்தார்கள். சரி, ஆனால் நான் முதலில் அவரைப் பிடித்தேன்." என்று அயதுல்லா கமேனியின் மரணம் குறித்து அதிபர் ட்ரம்ப் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். இது, 2024-ல் ட்ரம்பைக் கொல்ல ஒரு சதி என்று அமெரிக்க உளவுத்துறை நம்புவதை குறிக்கிறது," என்று கார்ல் தனது பதிவில் கூறியுள்ளார்.
ட்ரம்ப் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் கமேனியின் மரணத்தை அறிவிக்கும் போது, அவரை வரலாற்றில் மிகவும் தீய மனிதர்களில் ஒருவர் என்று கூறியிருந்தார். "எங்கள் உளவுத்துறை மற்றும் அதிநவீன கண்காணிப்பு அமைப்புகளைத் தவிர்க்க கமேனியால் முடியவில்லை, இஸ்ரேலுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதால், அவரால் அல்லது அவருடன் கொல்லப்பட்ட மற்ற தலைவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை" என்று டிரம்ப் கூறியிருந்தார்.