மதுரை மண்டேலா நகரில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடிப் பேசினார். பொதுவாக அமைச்சர்களிடையே சிறப்பாகப் பணியாற்றுவதில் தான் போட்டி இருக்கும், ஆனால் திமுகவில் யார் அதிக ஊழல் செய்வது என்பதில் அமைச்சர்களிடையே போட்டி நடப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
அரசுப் பணி, இடமாற்றம், மணல் திருட்டு என சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஊழல் மலிந்த இந்த அரசு தொடர்வதற்கு எவ்வித தார்மீக உரிமையும் இல்லை என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
தனது உரையைத் தொடங்குவதற்கு முன் திருப்பரங்குன்றம் முருகனை தரிசித்ததாகக் குறிப்பிட்ட பிரதமர், திமுக அரசின் தவறான செயல்பாடுகளால் உயிரிழந்த பக்தர் பூர்ணசந்திரனின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறியதை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.
மதுரை என்றாலே திமுக அரசுக்குக் கசப்பதாகக் கூறிய அவர், மத்திய அரசின் ஏழைகளுக்கான வீடு கட்டும் திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தாமல் திமுக முடக்கி வருவதாகக் கூறினார்.
மேலும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக இருந்ததை நினைவுகூர்ந்த பிரதமர், தற்போது தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கமும் குற்றங்களும் அதிகரித்து வருவதாகக் கவலை தெரிவித்தார்.
மத்தியில் திமுக அமைச்சரவையில் இருந்தபோது தமிழகத்திற்கு எவ்வித நன்மையும் செய்யவில்லை என்று சாடிய பிரதமர், பாம்பன் நவீன தூக்கு பாலம் மற்றும் ஜல்லிக்கட்டுக்கான உரிமையை பாஜக மீட்டெடுத்ததைச் சுட்டிக்காட்டினார்.
ஐரோப்பிய நாடுகளுடனான புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் தமிழக இளைஞர்களுக்குப் பல லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், ஜவுளி மற்றும் மின்னணுத் துறைகள் உலகத்தரம் பெறும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
தமிழகத்தில் ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை அமைக்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று அவர் தனது உரையை நிறைவு செய்தார்.