மகாராஷ்டிர மாநிலம் நாந்தேட் குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விவாகரத்து வழக்கு ஒன்றில், கணவரிடம் இழப்பீட்டுத் தொகைக்கு பதிலாக “மீண்டும் ஒருமுறை தாய்மையடைய அனுமதிக்க வேண்டும்” என மனைவி கோரிக்கை விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த தம்பதி இருவரும் மருத்துவர்கள். இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவர் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடினார். பொதுவாக விவாகரத்து வழக்குகளில் ஜீவனாம்சம் அல்லது சொத்துக்களில் பங்கு கோருவதே வழக்கமாக இருக்கும். ஆனால், இந்த வழக்கில் அந்த பெண் மருத்துவர் விடுத்த கோரிக்கை நீதிபதியையே வியப்பில் ஆழ்த்தியது.
நீதிமன்றத்தில் அந்தப் பெண் வாதாடுகையில், “எனது கணவரிடம் இருந்து எனக்குப் பணம், காசு எதுவும் தேவையில்லை. ஆனால் விவாகரத்து பெறுவதற்கு முன்னால் நான் மீண்டும் ஒருமுறை கர்ப்பமடைய விரும்புகிறேன். ஏற்கனவே எங்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அந்தக் குழந்தைக்கு ஒரு உடன்பிறப்பு வேண்டும் என்பதே எனது ஆசை,” என்று தெரிவித்தார்.
இந்தக் கோரிக்கையைக் கேட்டவுடன் நீதிமன்ற அறையில் சிறிது நேரம் நிசப்தம் நிலவியது. மேலும், பிறக்கப்போகும் இரண்டாவது குழந்தையின் முழுச் செலவையும் தானே ஏற்றுக் கொள்வதாகவும், கணவரிடம் இருந்து எவ்வித உதவியும் எதிர்பார்க்க மாட்டேன் என்றும் அவர் உறுதி அளித்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, பெண்ணின் விருப்பத்தை ஏற்று ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கினார். அதன்படி, அந்தப் பெண் IVF (In-Vitro Fertilization) தொழில்நுட்பம் மூலம் தாய்மையடைய நீதிமன்றம் அனுமதி அளித்தது.
உடல் ரீதியான உறவு இன்றி, கணவரின் விந்தணுக்களைப் பயன்படுத்தி ஆய்வக முறையில் கருத்தரிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதற்கான மருத்துவச் செலவுகள் அனைத்தையும் அந்தப் பெண்ணே ஏற்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
விவாகரத்து பெறுவதற்கு முன்பு ஒரு பெண் தனது குடும்பத்தை நிறைவு செய்ய விரும்பினால், அதற்கு அவருக்கு உரிமை உண்டு என்பதைக் கருத்தில் கொண்டே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்த நடைமுறைகள் முடிந்த பின்னரே தம்பதியினருக்கு முறைப்படி விவாகரத்து வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சமூக வலைதளங்களில் இந்தச் செய்தி காட்டுத்தீயாகப் பரவி வரும் நிலையில், “ஒரு தாயின் உணர்வுக்கு நீதிமன்றம் மதிப்பளித்துள்ளது” எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.