மிஸ் பண்ணிடாதீங்க… இன்று வானில் அரங்கேறும் மெகா சந்திர கிரகணம்… எப்போது பார்க்கலாம்?… முழு நேர விவரம் இதோ…!!!
SeithiSolai Tamil March 03, 2026 04:48 PM

வானில் சூரியன், பூமி மற்றும் நிலவு ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் அரிய வானியல் நிகழ்வான முழு சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது. பூமியின் நிழல் நிலவின் மீது விழுவதால் ஏற்படும் இந்த நிகழ்வின்போது நிலவு வழக்கத்திற்கு மாறாக அடர் சிவப்பு நிறத்தில் ரத்த நிலவாகக் காட்சியளிக்கும்.

சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தைக் கடந்து செல்லும்போது நீல நிற ஒளி சிதறடிக்கப்பட்டு சிவப்பு ஒளி மட்டும் நிலவை அடைவதால் இந்த நிற மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக இம்முறை நிலவின் விளிம்பில் மெல்லிய நீல நிறக் கோடு தோன்றும் என்று வானியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

பூமியின் ஓசோன் படலம் வழியாகச் செல்லும் ஒளியில் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்கள் உறிஞ்சப்பட்டு அடர் நீல நிறம் மட்டும் நிலவின் விளிம்பில் தெரிவதே இதற்குக் காரணமாகும். இந்திய நேரப்படி இன்று மாலை 3 மணி 20 நிமிடங்களுக்குப் பகுதி நேர கிரகணம் தொடங்குகிறது.

மாலை 4 மணி 45 நிமிடங்களுக்கு முழு சந்திர கிரகணம் ஆரம்பமாகி மாலை 5 மணி 10 நிமிடங்களுக்கு நிலவு முழுமையாக மறைந்த நிலையில் ரத்த நிலவாகத் தென்படும். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும் அருணாசலப் பிரதேசத்தில் இந்த நிகழ்வை முழுமையாகக் காண முடியும்.

சென்னை, மும்பை, டெல்லி மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் சூரிய மறைவிற்குப் பிறகே நிலவு உதிக்கும் என்பதால் கிரகணத்தின் கடைசி சில நிமிடங்களை மட்டுமே மக்கள் பார்க்க இயலும். டெல்லியில் சுமார் 20 நிமிடங்களும் மும்பையில் சுமார் 7 நிமிடங்களும் மட்டுமே இந்த அரிய காட்சியைக் காண வாய்ப்புள்ளது.

சந்திர கிரகணத்தைப் பொதுமக்கள் வெறும் கண்களால் பாதுகாப்பாகப் பார்க்கலாம் என்றும் தெளிவான காட்சிக்குத் தொலைநோக்கிகளைப் பயன்படுத்தலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கில் பொதுமக்கள் இந்த நிகழ்வைக் காணத் சிறப்புத் தொலைநோக்கி வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மாலை 6 மணி 47 நிமிடங்களுக்குக் கிரகணம் முழுமையாக நிறைவடையும் என்பதால் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு கிழக்கு அடிவானத்தில் ரத்த நிலவின் அழகை ரசிக்கலாம். அடுத்த சில ஆண்டுகளுக்கு இதுபோன்ற முழு சந்திர கிரகணம் நிகழ வாய்ப்பில்லை என்பதால் இன்றைய நிகழ்வு வானியல் ஆர்வலர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.