திமுகவை கடுமையாக விமர்சித்தவர் விஜயகாந்த். அவர் கட்சி தொடங்கியது முதலே தேமுதிக திமுகவுடன் கூட்டணி அமைக்கவில்லை. அதனால்தான் திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை விஜயகாந்த் வாங்கினார். 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து எதிர்க்கட்சித் தலைவராகவும் அமர்ந்தார். ஆனால், விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தேமுதிக சரிவை சந்தித்தது. 8 சதவீத வாக்கு சதவீதத்தை வைத்திருந்த தேமுதிக தற்போது இரண்டு சதவீதத்திற்கும் கீழே போயிருக்கிறது..
ஆனாலும் தங்களுக்கு அதிக வாக்கு சதவீதம் இருப்பது போல காட்டிக் கொள்ளும் பிரேமலதா அதிமுக மற்றும் திமுக இரண்டு கட்சிகளிலும் கூட்டணி பேரம் நடத்தினார்.. எங்களுக்கு 20 சட்டமன்ற தொகுதிகளையும், ஒரு ராஜ்யசபா சீட்டும் கொடுக்க வேண்டும் என கேட்டார். ஆனால், அதிமுக அதை ஏற்கவில்லை. சரி நமக்கு 20 கொடுக்க மாட்டார்கள் என்பதை புரிந்து கொண்ட பிரேமலதா இறங்கி வந்து 10 தொகுதிகளை கேட்டார்.. அதற்கும் அதிமுக நோ சொல்லிவிட்டது..
அதனால்தான் திமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார் பிரேமலதா.. தவெக ஓட்டுக்களை பிரிக்கும் சூழ்நிலை இருப்பதால் தேமுதிக நம் பக்கம் இருப்பது நல்லது என கருதிய திமுக, தேமுதிகவுக்கு 7 முதல் 8 தொகுதிகளை கொடுப்பதாகவும், ஒரு ராஜ்யசபா சீட்டும் கொடுப்பதாக திமுக ஒப்பு கொண்டதாக செய்திகள் கசிந்தது.. அதேநேரம் தொகுதி பங்கீடு முடிவு செய்யப்படவில்லை.. ஏனெனில் காங்கிரஸ் திமுக கூட்டணியில் இணையுமா என்பதில் இழுபறி நீடித்து வந்தது..
காங்கிரஸ் 39 சட்டமன்ற தொகுதிகளையும், ஒரு ராஜ்ய சபா தொகுதியையும் கேட்கிறது.. ஆனால் திமுகவோ காங்கிரசுக்கு 25 தொகுதிகளை மட்டுமே கொடுக்க முடியும் என கறாராக சொல்கிறது.. பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு காங்கிரசுக்கு 25 தொகுதிகள் என்றால் தேமுதிகவுக்கு மேலும் சில தொகுதிகளில் ஒதுக்கப்படும்.
ஒருவேளை காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் கொடுக்கப்படும் சூழ்நிலை வந்தால் தேதிமுகவுக்கு கொடுக்கப்படும் தொகுதிகள் குறையும் என்கிறார்கள். அதேபோல், திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினாலும் தேமுதிகவுக்கு மேலும் சில தொகுதிகள் கிடைக்க வாய்ப்புண்டு.