பிஞ்சு மனதில் நஞ்சை விதைத்த போதை… காஞ்சா பழக்கத்தை வீட்டில் காட்டிக்கொடுத்த 9 வயது சிறுமி… கழுத்தை அறுத்து கொன்ற 13 வயது சிறுவன்…!!!
SeithiSolai Tamil March 03, 2026 06:48 PM

பீகார் மாநிலம் கதிஹார் நகரில் தனது போதைப்பழக்கம் குறித்து வீட்டில் புகார் அளித்த காரணத்திற்காக 9 வயது சிறுமியை 13 வயது சிறுவன் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலாசி பகுதியில் உள்ள சந்தல்பூர் கிராமத்தைச் சேர்ந்த அந்தச் சிறுவன் கடந்த சில காலமாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாக இருந்துள்ளார்.

அவர் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதை நேரில் பார்த்த அதே கிராமத்தைச் சேர்ந்த சிறுமி இது குறித்து சிறுவனின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் அந்தச் சிறுமி மீது கடும் கோபத்தில் இருந்து வந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வயலில் தனியாக இருந்த சிறுமியைத் தடுத்து நிறுத்தித் தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் கழுத்தை அறுத்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்தச் சிறுமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி நேற்று காலை அந்தச் சிறுவனைப் பிடித்துக் காவலில் எடுத்தனர்.

விசாரணையின்போது தனது போதைப் பழக்கத்தைப் பெற்றோரிடம் காட்டிக் கொடுத்த ஆத்திரத்தில் இந்தக் கொடூரச் செயலைச் செய்ததாகச் சிறுவன் ஒப்புக்கொண்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் மைனர் என்பதால் அவரைச் சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்த போலீசார் இச்சம்பவம் குறித்துத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.