கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான காரமடை அரங்கநாதர் கோவிலில் மாசி மகா தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு “கோவிந்தா கோவிந்தா” என பக்தி முழக்கத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளிய அரங்கநாதர்
இந்த ஆண்டு மாசி மகா திருவிழா கடந்த மாதம் 23ஆம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழா நாட்களில் அரங்கநாத பெருமாள் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அண்ணவாகனம், சிம்மவாகனம், அனுமந்தவாகனம், கருடவாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.
நேற்றைய தினம் அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து அரங்கநாத பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் திருக்கல்யாண நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இன்று காலை அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அரங்கநாத பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் மணக்கோலத்தில் எழுந்தருளினார்.
மாலை நடைபெற்ற திருத்தேரோட்ட நிகழ்ச்சியில் கோவில் முன்பாக திரண்டிருந்த பக்தர்கள் “கோவிந்தா கோவிந்தா” என பக்தி முழக்கமிட்டனர். தாசர்களின் சங்கு ஒலி முழங்க, பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவில் முன்பில் இருந்து புறப்பட்ட திருத்தேர் நான்கு மாடவீதிகளின் வழியாக வலம் வந்து மீண்டும் கோவிலை அடைந்தது.
இந்த திருவிழாவில் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் சிறப்பாக செய்திருந்தனர். விழா அமைதியாகவும், ஆனந்தமயமான சூழலிலும் நிறைவடைந்தது.