ஈரான் அணுசக்தி நாடாக உருவெடுப்பதைத் தடுக்க அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் அந்த நாட்டின் மீதான தாக்குதலுக்கான காரணத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விளக்கியுள்ளார். ஈரான் தனது அணுஆயுதத் திட்டம் மற்றும் ஏவுகணைத் திட்டங்களுக்காகப் பூமிக்கடியில் புதிய தளங்களையும் பதுங்கு குழிகளையும் அமைத்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்னும் சில மாதங்களில் ஈரான் அணுஆயுதங்களை உருவாக்கிவிடும் என்பதால் இப்போதே நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் அதனைத் தடுக்க முடியாது என்ற சூழலில்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற போரின்போது ஈரானின் அணுசக்தி மையங்கள் தகர்க்கப்பட்ட போதிலும் அந்த நாடு மீண்டும் புதிய தளங்களை ரகசியமாகக் கட்டி வருவதை இஸ்ரேல் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தக் கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து வளைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் தற்போது இஸ்ரேல் மற்றும் அண்டை நாடுகள் மீது தீவிரத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
குறிப்பாக வளைகுடா பகுதிகளில் உள்ள எண்ணெய் வயல்களைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதால் உலக அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. ஈரானுக்கும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பிற்கும் இடையே நிலவி வந்த மறைமுகப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள இந்தப் போர்ச் சூழல் உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.