பெற்றோர்களுக்குத் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலை எப்போதும் உண்டு. அவர்களின் ஆரோக்கியம் முதல் கல்வி வரை அனைத்திற்கும் அரசு கைகொடுக்கிறது. குறிப்பாக, மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா’ (PMMVY) திட்டம் கர்ப்பிணிப் பெண்களுக்குப் பெரும் உதவியாக உள்ளது. இத்திட்டத்தின் கீழ், முதல் குழந்தைக்கு ரூ.5,000 நிதி உதவி இரண்டு தவணைகளாக (ரூ.3,000 மற்றும் ரூ.2,000) வழங்கப்படுகிறது. இரண்டாவது பெண் குழந்தை பிறந்தால், ஒரே தவணையாக ரூ.6,000 நேரடியாக வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்படுகிறது.
19 வயது நிரம்பிய, ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கும் குறைவாக உள்ள பெண்கள் இதற்குத் தகுதியானவர்கள். குழந்தை பிறந்த 270 நாட்களுக்குள் விண்ணப்பிப்பது அவசியம். இதற்கு ஆதார் அட்டை, வங்கி பாஸ்புக், ரேஷன் கார்டு மற்றும் MCP கார்டு ஆகியவை தேவை. ஆன்லைனில் pmmvy.wcd.gov.in என்ற இணையதளம் மூலமோ அல்லது நேரடியாக அங்கன்வாடி மையங்கள் வழியாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தின் நிலையை அறிய இணையதளத்தில் மொபைல் எண்ணைப் பயன்படுத்தலாம் அல்லது 1800-11-1311 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.