ஈரானில் 1979 புரட்சிக்குப் பிறகு இஸ்லாமிய ஷரியா சட்டங்களின்படி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பெண்களுக்கான ஆடை கட்டுப்பாடுகள் மிகக் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன; குறிப்பாக, பெண்கள் பொது இடங்களில் தலைமுடியை மறைக்கும் வகையில் ‘ஹிஜாப்’ அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்களுக்கு அபராதம் முதல் சிறைத்தண்டனை வரை வழங்கப்படுவதுடன், ஆடை கட்டுப்பாட்டை கண்காணிக்க ‘தார்மீகக் காவல்துறை’ (Morality Police) எப்போதும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆடை மட்டுமல்லாமல், மதுபானம் தயாரிப்பதற்கும் பருகுவதற்கும் ஈரானில் முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மீதும் கடுமையான கட்டுப்பாடுகள் நிலவுகின்றன. திருட்டு, போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றங்களுக்குக் கசையடி மற்றும் மரண தண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. நாட்டின் முக்கிய பொருளாதாரத் துறைகள் அனைத்தும் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.