ஆட்சியில் பங்கு கேட்டு எகிறிய காங்கிரஸ்! லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த ஸ்டாலின்.. திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியானது எப்படி?
Seithipunal Tamil March 05, 2026 08:48 PM

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நீண்ட நாட்களாக நீடித்து வந்த தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு தற்போது முடிவு கிடைத்துள்ளது. இரு கட்சிகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 28 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை (ராஜ்யசபா) இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுகவுடன் நீண்ட காலமாக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், இந்த முறை தொடக்கத்தில் 41 தொகுதிகள் கோரி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. ஆனால் திமுக தலைமையோ கடந்த தேர்தலில் இருந்த கூட்டணியை தொடர்வதுடன், இந்த முறை மக்கள் நீதி மய்யம் மற்றும் தேமுதிக உள்ளிட்ட புதிய கட்சிகளும் இணைந்துள்ளதால் கூடுதல் தொகுதிகளை வழங்க முடியாது எனத் தெளிவாக தெரிவித்தது.

திமுக கூட்டணியில் 20-க்கும் மேற்பட்ட கட்சிகள் இருப்பதால் அதிக இடங்கள் ஒதுக்க இயலாது என்ற நிலைப்பாட்டை திமுக தொடர்ந்து வலியுறுத்தியது. அதே நேரத்தில் காங்கிரஸ் கூடுதல் தொகுதிகளை கோரி வலியுறுத்தியதால் பேச்சுவார்த்தை பல நாட்கள் இழுபறியாக நீடித்தது. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகக்கூடும் என்ற அரசியல் பரபரப்பும் உருவானது.

இதற்கிடையில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுக்குள் கூட கருத்து வேறுபாடுகள் இருந்ததாக கூறப்பட்டது. சிலர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கலாம் என்று கருத்து தெரிவித்த நிலையில், மற்றொரு தரப்பு திமுக தான் நம்பகமான கூட்டணி என்றும் அதுவே வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என்றும் வலியுறுத்தினர்.

இந்த சூழலில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பில் நீடித்து வந்த தொகுதி பங்கீட்டு சிக்கலுக்கு தீர்வு காண பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்போது கூடுதல் தொகுதிகளுக்கு வாய்ப்பு இல்லை என்றும், அதிகபட்சமாக 25 தொகுதிகள் வரை வழங்க முடியும் என்றும் ஸ்டாலின் கூறியதாக தகவல்கள் தெரிவித்தன. இந்த நிலைப்பாட்டை ப.சிதம்பரம் டெல்லி காங்கிரஸ் தலைமையிடம் உடனடியாக எடுத்துரைத்ததாகவும் கூறப்படுகிறது.

தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்களும் திமுகவுடன் தொடரும் கூட்டணியே அரசியல் ரீதியாகச் சரியான முடிவு என டெல்லி தலைமையிடம் வலியுறுத்தியதையடுத்து, இறுதியில் காங்கிரஸ் 28 தொகுதிகளுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த முறை அதைவிட மூன்று தொகுதிகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ் தரப்பில் இது சமரச முடிவாக பார்க்கப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.