காலேஜ்க்கு தான் போறேன்னு சொன்னான்..! “விஜயை பார்க்க போன இடத்தில் விபரீதம்”… 48 நேரம் கழிச்சா தான் தெரியும்… உயிருக்கு போராடும் மாணவனின் தந்தை கதறல்…!!!!
SeithiSolai Tamil March 05, 2026 08:48 PM

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்ற இருசக்கர வாகனம், காவல்துறையினரின் வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவருக்கு மூளையில் பலத்த காயம் ஏற்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காகச் சென்னையிலிருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வந்த விஜய், அங்கிருந்து காரில் செங்கிப்பட்டிக்குப் பயணித்தார். வழியெங்கும் திரண்டிருந்த ரசிகர்கள், தங்களது இருசக்கர வாகனங்களில் விஜய்யின் காரைப் பின்தொடர்ந்து அதிவேகமாகச் சென்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் வளம்பக்குடி அருகே காரைப் பின்தொடர்ந்து வந்த ஒரு இருசக்கர வாகனம், அங்கு பாதுகாப்புப் பணியில் நின்றிருந்த காவல்துறையினரின் வாகனத்தின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் விக்னேஷ் மற்றும் அவரது நண்பர் ஆரோன் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டுப் படுகாயமடைந்தனர்.

தலையில் பலத்த காயமடைந்த விக்னேஷ், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவரது தந்தை செய்தியாளர்களிடம் கண்ணீருடன் கூறியதாவது,”காலை கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டுத்தான் வீட்டிலிருந்து சென்றான். நான் அவனுக்கு பேட்டரி வண்டிதான் வாங்கித் தந்துள்ளேன். ஆனால், நண்பனிடம் பெரிய வண்டியை வாங்கிக்கொண்டு விஜய்யைப் பார்க்கச் சென்றுள்ளான்.

விபத்தில் அவனது மூளையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இன்னும் 48 மணி நேரம் கழித்துதான் எதையும் சொல்ல முடியும் எனத் தெரிவித்துள்ளனர். அவனுடன் சென்ற நண்பர் ஆரோனுக்கு இடுப்பு எலும்பு முறிந்துள்ளதால் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது என்று கூறினார். மேலும் அதிவேகமாக வாகனங்களை ஓட்டிச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனப் பலமுறை அறிவுறுத்தப்பட்டும், ஆர்வக்கோளாறால் இளைஞர்கள் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.