இன்பன் - இனியன்.. தொடரும் 4 தலைமுறை நட்பு!" - அன்பில் மகேஸ் இல்ல விழாவில் முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!
க.சே.ரமணி பிரபா தேவி March 05, 2026 09:44 PM

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் சகோதரி மகள் திருமணம் இன்று (மார்ச் 5) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஸ்டாலின் மகள் குடும்பம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இரு குடும்பங்களுக்கும் இடையிலான நட்புறவு குறித்துப் பேசிய பேச்சு அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

"இது வெறும் கட்சியினர் வீட்டின் விழா அல்ல; என் சொந்த வீட்டின் விழா. கலைஞர் கருணாநிதி- அன்பில் தர்மலிங்கம் காலத்தில் தொடங்கிய இந்த நட்பு, அடுத்தடுத்த தலைமுறைகளாகத் தொடர்கிறது.

  1. முதல் தலைமுறை: தலைவர் கலைஞரும், அன்பில் தர்மலிங்கமும் உயிர்த் தோழர்களாக இருந்தனர்.
  2. இரண்டாம் தலைமுறை: நானும், அன்பில் பொய்யாமொழியும் (அன்பில் மகேஸின் தந்தை) இரட்டையர்களாகத் திரிந்தோம்.
  3. மூன்றாம் தலைமுறை: இன்று என் மகன் உதயநிதியும், அன்பில் மகேஸும் அதே நட்போடு பழகி வருகின்றனர்.
  4. நான்காம் தலைமுறை: இந்த உறவு இத்தோடு முடியவில்லை. என் பேரன் இன்பனும், அன்பில் மகேஷின் மகன் இனியனும் இப்போதே நெருங்கிய நண்பர்களாகப் பழகி வருவதைப் பார்க்கும்போது என் உள்ளம் பூரிக்கிறது.

இந்தத் தலைமுறை தாண்டியும் இந்த நட்புத் தொடர்வதைப் பார்த்துப் பெருமைப்படுகிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சியாகப் பேசினார்.

தங்கள் குடும்பத்திற்கும் அன்பில் குடும்பத்திற்கும் உள்ள நெருக்கத்தை முதல்வர் விவரித்தபோது, மேடையிலிருந்த முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்தக் கண்ணீர் விட்டுக் கலங்கியது விழாவில் நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.

இந்த 4 தலைமுறை நட்பு குறித்த முதல்வரின் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் திமுகவினரால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.