Breaking: மாநிலங்களவை தேர்தல்…! திமுக, அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்பு… ராமதாஸ் எதிர்ப்புக்கு மத்தியில் அன்புமணிக்கு கிரீன் சிக்னல்..!!
SeithiSolai Tamil March 06, 2026 06:48 PM

தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுகவின் தம்பிதுரை மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களின் மனுக்கள் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

வேட்புமனுப் பரிசீலனையின் போது ஒரு எதிர்பாராத திருப்பமாக, பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு வேட்பாளரான சுவாமிநாதன் மற்றும் அவரது வழக்கறிஞர் தரப்பினர், அன்புமணி ராமதாஸின் வேட்புமனுவை ஏற்கக் கூடாது எனத் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கூட்டணி மற்றும் உட்கட்சி விவகாரங்கள் தொடர்பான காரணங்களை முன்வைத்து இந்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும், வேட்புமனுவில் சட்ட ரீதியான குறைபாடுகள் ஏதுமில்லை என்பதால், அந்த எதிர்ப்பை நிராகரித்த தேர்தல் அதிகாரி, அன்புமணியின் மனு தகுதியானது என அறிவித்து அதனை ஏற்றுக்கொண்டார்.

அன்புமணியைத் தொடர்ந்து, அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரையின் வேட்புமனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதேபோல், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் பின்வரும் வேட்பாளர்களின் மனுக்களும் பரிசீலனைக்குப் பின் ஏற்கப்பட்டன . அதன்படி திருச்சி சிவா (திமுக), கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் (திமுக), கிறிஸ்டோபர் திலக் (திமுக), எல்.கே. சுதீஷ் (தேமுதிக – அதிமுக கூட்டணி ஆதரவு)

வேட்புமனுக்களைத் திரும்பப் பெற அவகாசம் உள்ள நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படவுள்ளது. தற்போதைய நிலவரப்படி, போதிய எம்.எல்.ஏ-க்களின் பலம் உள்ளதால் பெரும்பாலான வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்படவே அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இருப்பினும், பாமக-வில் தந்தை – மகன் தரப்பினரிடையே வேட்புமனுத் தாக்கலில் ஏற்பட்ட இந்த மோதல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.