டி20 உலகக் கோப்பை 2026 தொடரை இந்தியா- இலங்கை இணைந்து நடத்துகிறது. இதில் பாகிஸ்தான் உடனான அரசியல் முறுகல் நிலை காரணமாக பாகிஸ்தான் உடனான போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடைபெற்றது.
சூப்பர் 08 சுற்றுடன் பாகிஸ்தான் வெளியேறியுள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சல்மான் மிர்சா ஒரு சர்ச்சையில் சிக்கினார். அதாவது, இலங்கை, கண்டியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஒரு பெண்ணிடம் அவர் தவறாக நடந்து கொண்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த விவகாரம் பூதரமாக வெடித்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி.) அந்தக் குற்றச்சாட்டுகளை வீரரின் பெயரை குறிப்பிடாமல் நிராகரித்தது. சம்பந்தப்பட்ட செய்தியாளர் இந்த விஷயத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது.
இந்நிலையில் மிர்சா தனது சமூக வலைத்தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.
அதில், தனது பெயரை பாதுகாக்கும் நோக்கில், தனக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாகவும், செய்தி வெளியிட்ட பத்திரிக்கை "மலிவான பத்திரிகை" என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்த அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
"ஒரு அபத்தமான செய்தி ஊடகங்களில் பரவி வருகிறது, இந்த வகையான மலிவான பத்திரிகையை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். எந்த ஊடக நிறுவனமும் சரிபார்க்கப்படாத எந்த செய்தியையும் ஒளிபரப்ப முடியாது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே இந்த ஆதாரமற்ற மற்றும் போலி செய்தியை மறுத்துள்ளது, மேலும் ARY News-இல் பணிபுரியும் #ShahidHashmi (பத்திரிகையாளர்) மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போகிறேன். இந்த வகையான மோசமான செய்திகளை தடை செய்ய வேண்டும், மேலும் பாகிஸ்தான் அரசு அத்தகையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.