போர் தீவிரம்: இஸ்ரேலின் முக்கிய விமான நிலையம் இலக்கு...! – ஈரான் ஏவுகணை தாக்குதல் பரபரப்பு!
Seithipunal Tamil March 07, 2026 08:48 AM

அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுப் படைகள் ஈரானை குறிவைத்து தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், அதற்கு பதிலடியாக ஈரான் வளைகுடா நாடுகள் மீது ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் கடும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இதேபோல் இஸ்ரேல் மீதும் ஈரான் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

இஸ்ரேலின் சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு அமைப்புகளை தாண்டியும் சில ஈரானிய ஏவுகணைகள் இஸ்ரேல் பகுதிகளில் வெடித்து சேதத்தை ஏற்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் இஸ்ரேலும் தாக்குதலின் தாக்கத்தை எதிர்கொண்டு வருகிறது.மேலும் ஈரான் தலைவர் அயதுல்லா காமேனி உயிரிழந்ததாக வெளியான தகவல்களின் பின்னணியில், கடும் பதற்றத்தில் ஈரான் இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதற்கிடையில் இஸ்ரேலின் முக்கியமான பென் குரியன் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால் இந்த தகவலை இஸ்ரேல் ராணுவம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் இன்று ஏழாவது நாளாக நீடித்து வரும் நிலையில், போரை முடிவுக்கு கொண்டுவரும் பேச்சுவார்த்தைக்கு ஈரான் தயாரில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் இந்த போர் இன்னும் பல வாரங்கள் நீடிக்கக்கூடும் என்ற அச்சம் உலகளவில் உருவாகியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.