விடாமுயற்சியும் அர்ப்பணிப்பும் இருந்தால் எந்தவொரு இலக்கையும் எட்ட முடியும் என்பதை நிரூபித்துள்ளார், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கிருபாகரன். கைத்தறி நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த இவர், தற்போது யுபிஎஸ்சி (UPSC) தேர்வில் இந்திய அளவில் 439-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி, நாராயணபாளையம் தெருவைச் சேர்ந்த நடராஜன் - ஜெயலட்சுமி தம்பதியினர் கைத்தறி பட்டு நெசவுத் தொழிலை செய்து வருகின்றனர். இவர்களது மகன் கிருபாகரன், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கணக்கு அலுவலராகப் பணியாற்றி வருகிறார். எளிய பின்னணியைக் கொண்ட கிருபாகரன், ஐஏஎஸ் (IAS) அதிகாரி ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் கடந்த 5 ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடி வந்துள்ளார்.
வேலை மற்றும் குடும்பப் பொறுப்புகளுக்கு இடையே தனது கனவைக் கைவிடாமல் கிருபாகரன் படித்து வந்தார். இவருக்கு கல்பனா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ஏற்கனவே ஒருமுறை முதன்மைத் தேர்வு (Mains) வரை சென்று வாய்ப்பை இழந்த நிலையிலும், மனம் தளராமல் மீண்டும் முயற்சி செய்து தற்போது இந்த வெற்றியை ஈட்டியுள்ளார்.
தனது வெற்றி குறித்து கிருபாகரன் கூறுகையில்: "வேலையில் இருந்து கொண்டே குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு படிப்பது மிகவும் சவாலாக இருந்தது. இந்தச் சூழலில் தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் தங்கிப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனது பணிக்கான விடுமுறை எடுத்துக்கொண்டு தீவிரமாகப் படித்தேன். அதுவே என் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது."
"ஒரு பெரிய இலக்கை அடைய சில தியாகங்களைச் செய்தே ஆக வேண்டும்" என்று குறிப்பிடும் கிருபாகரன், கடந்த சில ஆண்டுகளில் தனது குடும்பத்துடன் வெளியில் சென்றது வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே என்று உருக்கமாகத் தெரிவித்தார். தனது இந்த வெற்றிக்கு முழு ஒத்துழைப்பு அளித்த குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அவர் நெகிழ்ச்சியுடன் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
மின்வாரியப் பணியில் இருந்தபோது கிடைத்த அனுபவங்களே, மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியதாக அவர் குறிப்பிடுகிறார். நீண்ட காலப் போராட்டத்திற்குப் பிறகு கிடைத்துள்ள இந்த வெற்றி, அவரது குடும்பத்தினரிடையேயும் காஞ்சிபுரம் மக்களிடமும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.