ஈரானின் உச்ச தலைவராக கடந்த 37 ஆண்டுகளாகப் பதவி வகித்து வந்த அயதுல்லா அலி கமேனி, கடந்த பிப்ரவரி 28, 2026 அன்று தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய அதிரடி ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலுக்கு ‘ப்ளூ ஸ்பாரோ’ (Blue Sparrow) எனப்படும் நவீன ஏவுகணையை இஸ்ரேல் பயன்படுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலிய ராணுவம் இந்தத் தாக்குதலை ‘ஆபரேஷன் ரோரிங் லயன்’ (Operation Roaring Lion) என்று அழைக்கிறது. அதே சமயம், அமெரிக்க பென்டகன் இதனை ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) எனக் குறிப்பிட்டுள்ளது. பிப்ரவரி 28 அதிகாலை ஈரானின் தெஹ்ரான் நகரின் மையப்பகுதியில் உள்ள காமேனியின் குடியிருப்பு வளாகத்தை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
ப்ளூ ஸ்பாரோ
மார்ச் 1 அன்று அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து ஈரானில் 40 நாட்கள் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் ‘ரஃபேல் அட்வான்ஸ்டு டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ்’ (Rafael Advanced Defense Systems) தயாரிப்பான ப்ளூ ஸ்பாரோ, மற்ற ஏவுகணைகளை விட மிகவும் ஆபத்தானது. 6.51 மீட்டர் நீளமும், 1,900 கிலோ எடையும் கொண்ட இந்த ஏவுகணை, வான்வெளியில் இருந்து ஏவப்படக்கூடிய ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையாகும்.
இந்த ஏவுகணையின் தனிச்சிறப்பு அதன் செங்குத்தான பயணப்பாதைதான். பொதுவாக வான் பாதுகாப்பு அமைப்புகள் அடிவானத்தில் இருந்து வரும் அச்சுறுத்தல்களையே கண்காணிக்கும். ஆனால், ப்ளூ ஸ்பாரோ விண்வெளியின் விளிம்பு வரை சென்று, அங்கிருந்து கிட்டத்தட்ட நேர் செங்குத்தாக இலக்கை நோக்கி விழும். ஒலியின் வேகத்தை விட பல மடங்கு வேகத்தில் வானிலிருந்து கீழே பாயும் இந்த ஏவுகணையை ரேடார்களால் கண்டறிவதற்குள், அது இலக்கைத் தாக்கி அழித்திருக்கும்.
அயதுல்லா அலி கமேனி
தொடக்கத்தில், இஸ்ரேலின் ‘ஆரோ’ வான் பாதுகாப்பு அமைப்பைச் சோதிப்பதற்காக ஒரு ‘டம்மி’ ஏவுகணையாகவே ப்ளூ ஸ்பாரோ உருவாக்கப்பட்டது. ஈரான் போன்ற நாடுகளின் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்த பயிற்சி பெறவே இது பயன்பட்டது. ஆனால், இந்தத் தொழில்நுட்பத்தையே அடிப்படையாகக் கொண்டு ‘ராக்ஸ்’ என்ற அதிநவீன போர் ஏவுகணையை இஸ்ரேல் உருவாக்கியது.
இந்த ஏவுகணை ஜிபிஎஸ் (GPS) சிக்னல்கள் முடக்கப்பட்ட சூழலிலும், ‘இனர்ஷியல் நேவிகேஷன் சிஸ்டம்’ (INS) மூலம் இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டது. 500 கிலோ எடையுள்ள வெடிமருந்துகளைச் சுமந்து செல்லும் இது, தரைக்கு அடியில் உள்ள இலக்குகளையும் ஊடுருவி அழிக்கக்கூடியது.
1989-ம் ஆண்டு முதல் ஈரானின் முழு அதிகாரத்தையும் தன் வசம் வைத்திருந்த காமேனியின் மறைவு, அந்த நாட்டின் அரசியல் மற்றும் ராணுவக் கட்டமைப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவுடன் முழுமையாக ஒருங்கிணைந்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது, உலக நாடுகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் போர் நீடித்தால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 150 டாலர்களை தொடுமா? - கத்தார் அதிர்ச்சி தகவல்