விழுப்புரம்: விழுப்புரம் நகரின் மையப்பகுதியில் நகை வியாபாரியைக் கத்தியைக் காட்டி மிரட்டி, 4 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் நகரின் மையப்பகுதியில் நகை வியாபாரியைக் கத்தியைக் காட்டி மிரட்டி, 4 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மற்றும் ரொக்கப் பணம் மீட்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதை பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவர் நகை தொழில் (கொல்லர்) செய்து வருகிறார். கடந்த மார்ச் 3-ஆம் தேதி, சுமார் 4 கிலோ 106 கிராம் எடையுள்ள தங்க நகைகளை ஒரு பையில் எடுத்துக்கொண்டு, விற்பனைக்காகச் சென்னைக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார்.
விழுப்புரம் கோட்டை விநாயகர் கோவில் முன்பாக அவர் நடந்து சென்ற போது, இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள், ஆள்நடமாட்டம் மிகுந்த அந்தப் பகுதியில் ராஜமாணிக்கத்தை வழிமறித்தனர். திடீரென கத்தியைக் காட்டி மிரட்டிய அந்த கும்பல், அவரிடமிருந்த நகைப்பையைப் பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றது.
பட்டப்பகலில் நடந்த இந்தத் துணிகரக் கொள்ளை குறித்து ராஜமாணிக்கம் விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் குற்றவாளிகளைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
போலீசார் அப்பகுதியில் இருந்த 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்ததில், கொள்ளையர்கள் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.
தனிப்படை போலீசார் புதுச்சேரியில் ரகசியமாகப் பதுங்கியிருந்த கொள்ளையர்களைச் சுற்றி வளைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஆனந்தன், கந்தசாமி, சுப்பிரமணி,சுரேந்தர் ஆகிய 4 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
4 கிலோ தங்க நகைகள் முழுமையாக மீட்கப்பட்டன. கொள்ளையர்களிடமிருந்த 3 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கொள்ளைச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட 2 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி தற்போது தலைமறைவாக உள்ளார். அவரைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பரபரப்பான நகரின் மையப்பகுதியில் நடந்த இந்த கொள்ளைச் சம்பவத்தில், சில நாட்களிலேயே குற்றவாளிகளைக் கண்டறிந்து நகைகளை மீட்டெடுத்த விழுப்புரம் போலீசாரின் துரித நடவடிக்கையைப் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் பாராட்டி வருகின்றனர்.