சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்குகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை ரத்து செய்து தெலங்கானா மாநிலத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு தெலங்கானாவில் சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்குகள் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடியைச் சமாளிக்கத் திரையரங்கு உரிமையாளர்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்பட்டது.

ஆனாலும், தெலுங்கானாவில் தில்சுக்நகரில் உள்ள கோணார் தியேட்டரில் 20 ரூபாய் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டதை எதிர்த்து பிரேம் ராமாவத் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். குறித்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த அரசாணையை நிறுத்தி வைத்துள்ளது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் கோபால் வாதிடுகையில், 2019-ஆம் ஆண்டின் தெலங்கானா நகராட்சிகள் சட்டத்தின்படி, வணிக நிறுவனங்கள் தங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்குப் போதிய வாகன நிறுத்துமிடத்தை இலவசமாக வழங்க வேண்டும் என்பது கட்டாயம் என்று சுட்டிக்காட்டி வாத்திட்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட தெலுங்கானா உயர் நீதிமன்றம் நீதிபதி என்.வி.ஸ்ரவன் குமார் உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாவது;
சினிமா டிக்கெட் வாங்கிய ஒரு ரசிகரிடம் தனியாகப் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பது சட்டத்திற்குப் புறம்பானது என்றும், இந்தத் தீர்ப்பு மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்து சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்குகளுக்கும் பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளதோடு, இதனை உடனடியாக அமல்படுத்த அனைத்து நகராட்சி அமைப்புகளுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் ஏப்ரல் 06-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.