சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் மீதான நகை திருட்டு புகாரை மதுரை நீதிமன்றம் இன்று அதிகாரப்பூர்வமாக முடித்து வைத்தது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் நிகிதா என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், அஜித்குமார் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். துரதிர்ஷ்டவசமாக, விசாரணையின்போது காவலர்கள் நடத்திய தாக்குதலில் அவர் உயிரிழந்தது தமிழகத்தையே உலுக்கியது.
இந்த காவல் மரண வழக்கை விசாரித்த சிபிஐ, சம்பந்தப்பட்ட காவலர்கள் மற்றும் டிஎஸ்பி உள்ளிட்ட உயர் அதிகாரிகளை ஏற்கனவே கைது செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கின் தொடக்கப் புள்ளியான நகை திருட்டு புகார் குறித்து சிபிஐ தரப்பில் ஆய்வு செய்யப்பட்டது. திருடு போனதாக கூறப்படும் நகைகளை கண்டுபிடிக்க முடியாததாலும், போதிய ஆதாரங்கள் இல்லாததாலும் இந்த வழக்கை முடித்து வைக்க சிபிஐ முடிவு செய்தது.
மதுரை தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையில், புகார் அளித்த நிகிதா நேரில் ஆஜராகி, வழக்கை முடித்து வைப்பதில் தனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார். அவரது சம்மதத்தை தொடர்ந்து, அஜித்குமார் மீதான திருட்டு புகாரை நீதிமன்றம் ரத்து செய்தது.
இருப்பினும், அஜித்குமாரின் மரணத்திற்கு காரணமான காவலர்கள் மீதான கொலை வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva