டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட 23 பேரின் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த விடுதலையை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றம் செய்ததற்கான உரிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்பட 23 பேரை கடந்த வாரம் சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது.

இந்த நிலையில், கெஜ்ரிவால் உள்பட 23 பேரின் விடுதலையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்த நிலையில் அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
இதன் போது சிபிஐ சார்பாக ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா, கெஜ்ரிவால் மற்றும் மணிஷ் சிசோடியாவை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது சட்டத்திற்குப் புறம்பானது என்றும், வழக்கின் உண்மைத்தன்மையை முழுமையான விசாரணை மூலம் கண்டறியாமல், வழக்கின் ஆரம்பக்கட்டத்திலேயே அவர்களை விடுவித்தது தவறு என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த மதுபானக் கொள்கை வழக்கு நாட்டின் மிகப்பெரிய ஊழல்களில் ஒன்று என்றும், இந்த மதுபானக் கொள்கைக்காக ஊழல் மற்றும் லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரங்கள் உள்ளன. என்று கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, சிபிஐயின் மனு விசாரணைக்கு ஏற்பதாக கூறிய நீதிமன்றம், இது தொடர்பாக பதிலளிக்குமாறு கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியாவுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கின் விசாரணை வரும் மார்ச் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.