ஒருதலை காதல்; திருமணத்திற்கு மறுத்த இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து; தென்காசி அருகே இளைஞர் வெறிச்செயல்..!
Seithipunal Tamil March 10, 2026 05:48 AM

தென்காசி அருகே பட்டப்பகலில் பள்ளி முன்பு இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் இலத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இளம்பெண் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். குறித்த பள்ளி வாசலில் அந்தப் பெண்ணை வழிமறித்த இளைஞர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றிய நிலையில் குறித்த இளைஞர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெண்ணின் கழுத்து மற்றும் உடலில் பல்வேறு பகுதிகளில் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதனால் படுகாயம் அடைந்த பெண் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார். அதைக்கண்டு அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து, உடனே தகவல் அறிந்து போலீசார் விரைந்து சென்றுள்ளனர்.

உடனடியாக, உயிருக்குப் போராடிய இளம்பெண்ணை மீட்டு தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 இச்சம்பவம் குறித்து இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், இளம்பெண்ணை கத்தியால் குத்திய நபர் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுரேஷ் என்பது தெரிய வந்தது.

இவர் தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பழக்கடையில் வேலை பார்த்து வரும் நிலையில், பள்ளிக்கு வரும்போது அந்த இளம்பெண் அந்த பழக்கடைக்கு பழங்கள் வாங்கச் செல்வது வழக்கமாக வைத்துள்ளார்.

 அவரும் திருமணமாகி கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இதை அறிந்துகொண்ட சுரேஷ், அந்த பெண்ணுடன் சகஜமாக பேசிப் பழகியுள்ளதோடு, ஒரு கட்டத்தில் இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்துள்ளார்.

நாளடைவில், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக அவரிடம் கூறியுள்ளார். அதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்த நிலையில் தொடர்ந்து அவருக்கு லவ் டார்ச்சர் கொடுத்ததால் சுரேஷிடம் பேசுவதையே இளம்பெண் நிறுத்தியுள்ளார்.

இந்த சூழலில் அவர் பணிபுரியும் பள்ளிக்குச் சென்று தனது காதலை ஏற்குமாறு கூறி மிரட்டியுள்ளார். அதற்கு இளம்பெண் மறுப்புதெரிவித்துள்ளதால் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர்  பழம் வெட்டப் பயன்படுத்தப்படும் கத்தியால் அவரை சரமாரியாகக் குத்தியது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து இளைஞரைக் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் தென்காசியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.