ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தற்போது எரிசக்தி ஆதாரங்களை இலக்கு வைக்கும் அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளது.
கடந்த மூன்று வாரங்களாக நீடிக்கும் இந்த மோதலில், முதன்முறையாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிலையங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இஸ்ரேல் ஈரானின் 'சவுத் பார்ஸ்' எரிவாயு வயலை தாக்கியதற்கு பதிலடியாக, சவுதி அரேபியாவின் அராம்கோ சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கத்தார், ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிசக்தி மையங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இந்த மோதல் உலகளாவிய எரிசக்தி உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக, உலகின் மிகப்பெரிய எரிவாயு வயலான சவுத் பார்ஸ் மீதான தாக்குதலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 110 டாலராக உயர்ந்துள்ளது.
இந்தியா தனது எல்பிஜி தேவையில் 80 சதவீதத்திற்கு மேல் கத்தார் மற்றும் சவுதி அரேபியாவையே சார்ந்துள்ளதால், இந்த போர் நீடித்தால் இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் விநியோக தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ள நிலையில், இத்தாக்குதல்கள் உலக பொருளாதாரத்தில் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
Edited by Siva