5 தலைநகரங்கள், பெண்களுக்கு தனித்தொகுதி: நாம் தமிழர் கட்சியின் அதிரடித் தேர்தல் அறிக்கை வெளியீடு!
Seithipunal Tamil March 19, 2026 08:48 PM

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான நாம் தமிழர் கட்சியின் விரிவான தேர்தல் அறிக்கையை, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில் வெளியிட்டார். 462 பக்கங்கள் மற்றும் 49 தலைப்புகளில் அமைந்துள்ள இந்த அறிக்கையில், தமிழக அரசியலையே புரட்டிப்போடும் வகையிலான பல்வேறு அதிரடி மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
ஐந்து தலைநகரங்கள்: நிர்வாகப் பரவலாக்கத்திற்காகச் சென்னை, திருச்சி, கோவை, குமரி மற்றும் மதுரை ஆகிய 5 நகரங்கள் தலைநகரங்களாக மாற்றப்படும்.

பெண்களுக்குத் தனித்தொகுதி: பட்டியல் இனத்தவர்களுக்கு உள்ளது போல, பெண்களுக்கென பிரத்யேகமாகத் தனித்தொகுதிகள் ஒதுக்கப்படும்.

தேர்தல் சீர்திருத்தம்: மின்னணு வாக்குப்பதிவு முறை ஒழிக்கப்பட்டு, மீண்டும் வாக்குச்சீட்டு முறை அமல்படுத்தப்படும். வாக்களிப்பது கட்டாயமாக்கப்படும்.

மாநில சுயாட்சி: 'மாநிலத்தில் தன்னாட்சி, மத்தியில் கூட்டாட்சி' என்பதே இலக்கு. மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி (GST) வரியில் 75% பங்கு கிடைக்கப் போராடுவோம்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு: மருத்துவக் கல்வி தூய தமிழில் கற்பிக்கப்படும். அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

நீதித்துறை மாற்றம்: சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளை அமைக்கப்படும். மாநில உயர்நீதிமன்றங்களில் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களே தலைமை நீதிபதியாக இருக்கச் சட்டம் கொண்டு வரப்படும்.

மேலும், குடியரசுத் தலைவரை மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் முறை, வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு வாக்குரிமை மற்றும் 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு 1 நாடாளுமன்றத் தொகுதி எனப் பல தொலைநோக்குத் திட்டங்களைச் சீமான் அறிவித்துள்ளார். "மக்களால் தேர்வு செய்யப்படாத எவருக்கும் மக்களை ஆட்சி செய்ய அதிகாரமில்லை" என அவர் தனது உரையில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.