திண்டுக்கல் மாவட்டத்தில் நிலப் பட்டா பெயர் மாற்றம் செய்ய 4,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் சத்யா மற்றும் அவருக்கு உதவியாக இருந்த தரகர் சாந்தகுமார் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர். அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பித்தபோது, சத்யா அதற்குப் பணம் கேட்டுள்ளார்.
அந்தப் பணத்தைத் தரகர் சாந்தகுமாரிடம் கொடுக்குமாறு அவர் விவசாயியிடம் அறிவுறுத்தியுள்ளார்.லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த விவசாயி, இது குறித்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். போலீசாரின் ஆலோசனையின்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை விவசாயி தரகர் சாந்தகுமாரிடம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த போலீசார் அவரை கையும் களவுமாகப் பிடித்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், கிராம நிர்வாக அலுவலர் சத்யாவின் தூண்டுதலின் பேரில் தான் பணம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் சத்யா மற்றும் சாந்தகுமார் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.