மீண்டும் மிகப்பெரிய தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும்; எங்களின் நிபந்தனைகளின் படியே எல்லாம் முடிவுக்கு வரும்; ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா..!
Seithipunal Tamil March 20, 2026 07:48 AM

அமெரிக்காவின் பேச்சு வார்த்தைக்கு இணங்கி அணு ஆயுத ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாத நிலையில், இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா ஈரான் மீது கண்மூடி தனமாக தாக்குதல் நடத்தி வருகின்றது.

ஈரானும் அதற்கு பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்காவின் தாக்குதலில் கடந்த 28-ஆம் தேதி, ஈரான் உச்ச தலைவர் உள்ளிட்ட பலரும் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் கடும் கோபமடைந்த ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது அதிரடி ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறது. 

அத்துடன், அமெரிக்காவும் ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இந்தப் போரால் உலகம் முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு பொருளாதாரம் சரிவு உள்ளிட்ட சிக்கலைச் சந்தித்து வருகின்றன. இதையடுத்து, இந்தப் போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்ற நிலையில், இருநாடுகளும் அதிகார போட்டியில் நீயா நானா என  மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் குறித்த போர் 19 நாட்களை கடந்து தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், ஈரான் மீண்டும் மிகப்பெரிய தாக்குதலை எதிர்கொள்ளும் நேரிடும் என்றும், வளைகுடாப் போர் அமெரிக்காவின் நிபந்தனைகளின்படியே முடிவுக்கு வரும் என்றும் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

''எங்கள் திறன்கள் தொடர்ந்து வலுப்பெற்று வருகின்றன, ஈரானின் திறன்கள் தொடர்ந்து சீரழிந்து வருகின்றன. ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டன. கார்க் தீவில் உள்ள ஈரானின் இராணுவத் திறன்கள் மீதான தாக்குதல்கள், அந்நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் கட்டுப்பாட்டை அமெரிக்காவிற்கு அளிக்கின்றன.'' என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஈரானில் இதுவரை 7,000-க்கும் மேற்பட்ட இலக்குகளை அமெரிக்க ராணுவம் தாக்கியுள்ளதாகவும், ஈரான் மீண்டும் மிகப்பெரிய தாக்குதலை எதிர்கொள்ளும். என்று குறிப்பிட்டுள்ளதோடு, வளைகுடாப் போர் அமெரிக்காவின் நிபந்தனைகளின்படியே முடிவுக்கு வரும் என்று எச்சரித்துள்ளார்.

மேலும், ஈரானின் இராணுவத்தில் தலைமைப் பதவிகள் மேலும் மேலும் நிலையற்றதாகி வருகின்றன என்று சுட்டிக்காட்டியுள்ளதோடு, அமெரிக்கப் படைகள் ஈரானின் சொத்துக்களை உலகின் வேறு எந்த இராணுவமும் செய்ய முடியாத வகையில், திட்டமிட்டு, இரக்கமின்றி மற்றும் மிக அதிக அளவில் குறிவைத்துத் தாக்குகின்றன என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், தனது இலக்குகள் நிறைவேறும் வரை அமெரிக்கா தனது நடவடிக்கைகளைத் தொடரும் என்றும், மோதல் தொடங்கியதிலிருந்து அமெரிக்கப் படைகளுக்கு எதிரான ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ஒருவழி ட்ரோன் தாக்குதல்கள் 90% குறைந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும், புதிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் ஈரானின் திறனும் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும், அமெரிக்கா குறைந்தது 120 ஈரானிய கடற்படைக் கப்பல்களைச் சேதப்படுத்தியுள்ளது அல்லது மூழ்கடித்துள்ளது தாகவும், ஈரானின் 11 நீர்மூழ்கிக் கப்பல்களும் அழிந்துவிட்டன என பட்டியலிட்டுள்ளார். 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.