நிலம், வீடு தொடர்பான பிரச்னைகள் தீர... இந்த பெருமாள் கோவிலுக்கு ஒரு முறை போயிட்டு வாங்க..!
Top Tamil News March 20, 2026 08:48 AM

கும்பகோணத்தின் மையப்பகுதியில், சக்கரபாணி கோவிலுக்கு தென்மேற்கில், ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது, மிகப் பழமையான ஆதிவராகப் பெருமாள் கோவில். இதன் அருகிலேயே வராக விநாயகராகிய கரும்பாயிரம் பிள்ளையார் கோவிலும் உள்ளது. இக்கோவில் 800 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.

இக்கோவிலில் உள்ள மூலவர் ஆதிவராகப்பெருமாள் ஆவார். தாயார் அம்புஜவல்லி.

உலகில் முதலில் தோன்றிய இடம் 'வராகபுரி' என்னும் கும்பகோணம் என்று இந்தக் கோவில் தல புராணம் சொல்கிறது. எனவே முதலில் இந்தக் கோவிலில் உள்ள ஆதிவராகப் பெருமாளை வழிபட்ட பிறகே, அனைத்து தெய்வங்களையும் வழிபட வேண்டும் என்றும் சொல்கிறார்கள். கும்பகோணத்தில் மகாமகம் திருவிழா உண்டாவதற்கு முன்பாகவே இவர், இத்தலத்தில் எழுந்தருளியிருந்தார். எனவே இவரை, 'ஆதிவராகர்' என்று அழைக்கின்றனர். இவரே இங்குள்ள பெருமாள்களுக்கெல்லாம் முந்தியவர். மாசிமகத் திருவிழாவின்போது, கும்பகோணத்திலுள்ள சாரங்கபாணி, சக்கரபாணி, வரதராஜர், ராஜகோபாலர் மற்றும் இத்தலத்து மூர்த்தி ஆகிய ஐவரும் காவிரிக்கரைக்கு தீர்த்த நீராட எழுந்தருளுகின்றனர்.

மூலஸ்தானத்தில் சுவாமி, பூமாதேவியை இடது மடியில் அமர்த்திய கோலத்தில் காட்சி தருகிறார். பூமாதேவி திருமாலை வணங்கியபடி இருக்கிறாள். மூலவர் ஆதிவராகப் பெருமாள் அமர்ந்த கோலத்தில் இருக்க, அவருக்கு முன்பாக உற்சவர் நின்றபடி இருக்கிறார். உற்சவர் ஆதிவராகர், தனது இடது பாதத்தை ஆதிசேஷன் மீது வைத்தபடி காட்சி தருகிறார். சுவாமி முன்பாக 'வராக சாளக்கிராமம்' உள்ளது. இதில் சங்கு, சக்கர ரேகைகள் உள்ளன.

தல வரலாறு

வராகத்தின் (பன்றி) முகத்தோடு விளங்குவதால் வராகப் பெருமாள் என்ற பெயர் பெற்றார். ஒருசமயம் இரண்யாட்சன் என்னும் அசுரன், பூமியை பாதாள உலகிற்குள் எடுத்துச்சென்று மறைத்து வைத்தான். தன்னை மீட்கும்படி, பூமாதேவி திருமாலிடம் வேண்டினாள். திருமால் வராக அவதாரம் எடுத்து பாதாளத்திற்குள் சென்று பூமியை மீட்டு வந்தார். இவரே இத்தலத்தில் வராகமூர்த்தியாக அருள்புரிகிறார்.

கோரைக்கிழங்கு மாவுருண்டை பிரசாதம்

தினமும் ஆதிவராகப் பெருமாளுக்கு அர்த்தஜாம பூஜையின்போது, கோரைக்கிழங்கு மாவுருண்டையை நைவேத்யமாக படைக்கிறார்கள். பாய் நெய்வதற்குரிய நாணல் புல்லின் அடியில் முளைப்பது கோரைக்கிழங்கு. இந்தக் கிழங்கை பொடித்து, அதனுடன் அரிசி மாவு, சர்க்கரை மற்றும் நெய் சேர்த்து உருண்டையாகப் பிடித்து வைப்பர். மறுநாள் காலையில் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கிறார்கள். பூமியை மீட்டு வந்த பெருமாள் என்பதால். பூமிக்கு கீழே விளையும் கிழங்கு கலந்த நைவேத்யம் இவருக்கு படைக்கப்படுகிறது.

இத்தலம் ஞானம் மற்றும் பூமி சம்பந்தமான தோஷ நிவர்த்திக்கு சிறப்பு வாய்ந்தது. ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் சுவாமியை வணங்கி, தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். நிலம், வீடு தொடர்பான பிரச்னைகள் நீங்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.