தலைநகர் டெல்லியின் மிகவும் பரபரப்பான ஜாமா மஸ்ஜித் பகுதியில் அமைந்துள்ள ஒரு மார்க்கெட்டில், மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி கைவரிசை காட்ட முயன்ற பெண் ஒருவர் கையும் களவுமாக சிக்கியுள்ளார். கடையில் கையில் குழந்தையுடன் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் அருகே, நின்றிருந்த மற்றொரு பெண், மிக லாவகமாக அப்பெண்ணின் பைக்குள் கையை விட்டு திருட முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்த இளைஞர் ஒருவர், சந்தேகத்தின் அடிப்படையில் தனது மொபைல் கேமராவைப் பயன்படுத்தி அந்தப் பெண்ணின் ஒவ்வொரு அசைவையும் ரகசியமாகப் படம் பிடித்துள்ளார்.
அந்தப் பெண் பைக்குள் கையை விட்ட அடுத்த நொடியே, வீடியோ எடுத்துக் கொண்டிருந்த இளைஞர் பாய்ந்து சென்று அந்தப் பெண்ணின் கையைப் பிடித்துக் கொண்டார். “உன்னை ரெட் ஹேண்டடாகப் பிடித்துவிட்டேன், எல்லாம் என் போனில் ரெக்கார்ட் ஆகிவிட்டது” என்று அவர் சத்தமிட, அந்த இடமே பரபரப்பானது. பிடிபட்ட பெண் தான் திருடவில்லை என மறுத்து அந்த இளைஞருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, கையை விடுவித்துக் கொள்ளப் போராடியுள்ளார். இந்த வீடியோ ‘கர் கே கலேஷ்’ என்ற எக்ஸ் தள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வரும் நிலையில், பொதுமக்கள் நெரிசல் மிகுந்த இடங்களில் தங்கள் உடைமைகளை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.