'ஜனநாயகன்' படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்குமா? அர்ச்சனா பட்நாயக் பதில்!!
TV9 Tamil News March 20, 2026 12:48 PM

சென்னை, மார்ச் 20: நடிகரும், தவெக தலைவருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படம் வெளியீட்டுக்குத் தணிக்கைக் குழுவின் ஒப்புதல் கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகிவுள்ளது.  தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலுக்கு வந்துவிட்டன. அவை அமலில் இருக்கும்போது, படம் வெளியாகுமா என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து அவர் அளித்த விளக்கம் குறித்தும், தேர்தல் விவகாரம் குறித்தும் இக்கட்டுரையில் காணலாம்.

இதையும் படிங்க:சட்டமன்ற தேர்தல் 2026 : தபால் வாக்கு – கூடுதலாக 5 துறைகள் சேர்ப்பு – யாரெல்லாம் தபால் ஓட்டு செலுத்தலாம்?

செயலியில் புகார் அளிக்கலாம்:

இதுகுறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியதாவது, பறக்கும் படை சோதனையின்போது பிடிக்கப்படும் பணம், பொருட்களுக்கான உரிய ஆவணங்களைக் காட்டினால் அப்போதே அதைத் திருப்பிக் கொடுத்து விடுகிறார்கள். இந்தத் தகவலையும் தேர்தல் ஆணையம் வெளியிடும். சி-விஜில் செயலியை மக்கள் பயன்படுத்த வேண்டும். தேர்தல் விதிமீறல் சம்பவங்களைப் படம் பிடித்து அனுப்ப வேண்டும். இதை மக்களிடமிருந்து தேர்தல் ஆணையம் அதிகம் எதிர்பார்க்கிறது. இந்தச் செயலியில் புகார் கூறும் யாருடைய பெயரும் வெளியில் வராது.

செலவினப் பார்வையாளர்கள்:

போலீஸ் பார்வையாளர்கள், செலவினப் பார்வையாளர்கள் அனைவரும் தமிழகத்திற்கு வந்துவிட்டனர். கடந்த தேர்தலில் நியமிக்கப்பட்ட செலவினப் பார்வையாளர்களின் எண்ணிக்கையைவிட இந்தத் தேர்தலுக்குக் கூடுதல் செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். செலவினம் அதிகமாகச் செய்யப்படக்கூடிய தொகுதிகளாக 108 தொகுதிகள் முன்பு பட்டியலிடப்பட்டு இருந்தன. 2 தொகுதிக்கு ஒரு செலவினப் பார்வையாளர் என்ற அளவில் நியமிக்கப்படுவார்கள். ஆனால் இந்த முறை 151 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு முகமைகளிடம் தேர்தல் ஆணையம் கேட்டுப் பெற்று, அதிகச் செலவு செய்யக்கூடிய தொகுதிகளைக் கண்டறிந்து, செலவினப் பார்வையாளர்களை நியமிப்பார்கள். தமிழகம் அதிகத் தேர்தல் செலவு செய்யும் மாநிலம் என்ற பெயர் ஏற்கனவே உள்ளது என்றார்.

ஜனநாயகன் வெளியிட ஒப்புதல்?

நடிகரும், தவெக தலைவருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படம் வெளியீட்டுக்குத் தணிக்கைக் குழுவின் ஒப்புதல் கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகிவுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலுக்கு வந்துவிட்டன. அவை அமலில் இருக்கும்போது, ஒரு நடிகராகவும், கட்சித் தலைவராகவும் இருப்பவர் வேட்பாளராகிவிட்டால், அவர் நடித்த சினிமாக்களை வெளியிடுவதற்குத் தேர்தல் ஆணையம் ஒப்புதலைப் பெற வேண்டுமா? என்று கேட்கிறீர்கள். இது நல்ல கேள்விதான். ஆனால் இது முதன்முறையாக நடக்கும் சம்பவம். இதுபற்றி தேர்தல் ஆணையத்திடம் கேட்டுப் பதிலளிக்கிறேன். இதுகுறித்த விவரத்தில் தேர்தல் ஆணையம் முடிவே இறுதி விளக்கம் அளிக்கும் என்றார்.

தமிழ் கற்றுக் கொண்டதே சினிமா பார்த்து தான்:

தொடர்ந்து, மீண்டும் மீண்டும் ஜனநாயகன் பட வெளியீடு குறித்த சில கேள்விகளைத் தலைமை தேர்தல் அதிகாரியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குச் சிரித்தபடி பதிலளித்த அர்ச்சனா பட்நாயக், “பிரிவியூ காட்சி போட வேண்டுமா? நான் தமிழ் கற்றுக் கொண்டதே சினிமாக்களைப் பார்த்துதான். அப்படிப் பார்த்த முதல் படம் சாமி” என்று கூறினார்.

இதையும் படிங்க : சட்டமன்ற தேர்தல்: அத்தியாவசிய பணியாளர்கள், ஊடகவியலாளர்களுக்கு சிறப்பு அனுமதி

செய்தியாளர்கள் முன்பே பறந்த போன் கால்:

பின்னர் டெல்லியில் தேர்தல் ஆணைய அலுவலக அதிகாரியைச் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய அவர், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது ஒரு கட்சித் தலைவர் நடித்த படத்தை வெளியிடலாமா? அதில் எம்.சி.எம்.சி.யின் (சமூகவலைத்தளம், செய்தித்தாள் உள்ளிட்டவற்றில் செய்ய வேண்டிய அரசியல் விளம்பரங்களுக்குச் சான்றளிக்கும் குழு) நடவடிக்கை என்னவாக இருக்கும்? என்பதற்கு விளக்கம் வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் பத்திரிகையாளர்களுக்கு என்ன பதிலளிக்க வேண்டும் என்பதை கூறுங்கள்? என்றும் கேட்டுக் கொண்டார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.