வியட்நாம் சென்ற இந்தியக் குடும்பத்திற்கு அங்கே காத்திருந்தது ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி. இன்ஸ்டாகிராம் பயனர் @viadaksh பகிர்ந்துள்ள ஒரு வீடியோவில், தங்களது குடும்பத்தினருடன் சென்ற தங்களைச் சில உணவகங்கள் (Restaurants) உள்ளே விட மறுத்ததாகக் குற்றம் சாட்டியுள்ளனர். “நாங்கள் இந்தியர்கள் என்பதால் மட்டுமே எங்களை அவர்கள் அனுமதிக்கவில்லை. எங்களுடன் வந்த பெண்களையும் மதிக்காமல் வெளியேற்றினர்” என அந்த இளைஞர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். அந்த வீடியோவில் இருக்கும் ஒரு போர்டில், “புகைப்பிடிக்கத் தடை, இந்தியர்களுக்குத் தடை” (No Smoking, No Indian) என எழுதப்பட்டிருப்பது பார்ப்பவர்களின் ரத்தத்தைக் கொதிக்க வைத்துள்ளது.
View this post on InstagramA post shared by Daksh | Travel & Storytelling (@viadaksh)
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இணையவாசிகள் மத்தியில் இருவேறு கருத்துக்கள் எழுந்துள்ளன. ஒரு தரப்பினர், “இது அப்பட்டமான இனவெறி (Racism). எந்தவொரு நாடும் பயணிகளை இப்படி நடத்தக் கூடாது” என ஆவேசப்படுகின்றனர். அதே சமயம் மற்றொரு தரப்பினர், “சில இந்தியச் சுற்றுலாப் பயணிகளின் மோசமான ஒழுக்கமும், கலாச்சாரப் புரிதல் இல்லாமையுமே இதுபோன்ற எதிர்ப்புகளுக்குக் காரணமாக இருக்கலாம்” எனச் சுயபரிசோதனை கருத்துக்களையும் முன்வைக்கின்றனர். எது எப்படியோ, உலக அளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து வரும் வேளையில், இந்தியப் பயணிகளுக்கு நேர்ந்துள்ள இந்த அவமானம் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.