கண்டம்விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை பாகிஸ்தான் விரைவில் சோதித்துப் பார்க்க இருப்பதாக, அமெரிக்க உளவுத்துறைத் தலைவர் துளசி கபார்டு அந்நாட்டின் செனட் சபையில் தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா தனக்கு நிகரான அணுசக்தி எதிரிகளாக சீனா, ரஷ்யா, வடகொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளையே பார்க்கிறது. தற்போது அணுஆயுத போட்டி காரணமாக இஸ்ரேலுடன் இணைந்து ஈரானை சுக்குநூறாக்கி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானும் கண்டம்விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை சோதித்து பார்க்கவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அமெரிக்காவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
ஏனெனில், பாகிஸ்தானுக்கு பெரிய அளவில் நிதி அளிப்பதிலும், ராணுவத் தளவாடங்கள் உதவி செய்வதிலும் அமெரிக்கா ஒப்பந்தமிட்டுமிள்ளது.
பாகிஸ்தான் உருவாக்கி வருவதாகத் கூறும் புதிய ஏவுகணை அல்லது கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை அமெரிக்கா அடையாளம் காட்டவில்லை. ஆனால், அமெரிக்காவின் மதிப்பீட்டின்படி, பாகிஸ்தான் தனது கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மேம்பாட்டிற்கு அடித்தளமாக அமையக்கூடிய பெரிய ராக்கெட் மோட்டார்களை உருவாக்கி வருகிறதாகவும், அமெரிக்காவின் இந்த மதிப்பீட்டை, சர்வதேச உத்திசார் ஆய்வுக் கழகத்தால் பகுப்பாய்வு செய்யப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
அதாவது, நீண்டதூரம் சென்று தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்குவதில், இயந்திரக் கட்டுமானத் தொழிலுக்கான பெய்ஜிங் தானியக்க ஆராய்ச்சி நிறுவனம் பாகிஸ்தானுடன் ஒத்துழைத்து வந்ததாக அமெரிக்கா நம்புகிறது.
ஆனால், தனது அணு மற்றும் ஏவுகணைத் திறன்கள், எதிரிகளைத் தடுப்பதற்கும் பிராந்திய நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் இதுவரை எந்தவொரு கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையையும் நடத்தவில்லை. இருப்பினும் அந்த ஏவுகணைத் திட்டத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பாகிஸ்தானிய நிறுவனங்கள் மீது அமெரிக்கா ஏற்கெனவே தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.