Iran War: ”சுயநலம் தான் சார் உலகமே” ஈரானுக்கு வார்னிங், உடனே நிறுத்துங்க - பிஞ்சுகள் செத்தது எதற்காக? மௌனம்?
குலசேகரன் முனிரத்தினம் March 20, 2026 11:14 AM

Iran War: சுயநலத்தை மட்டுமே கருத்தில் கொள்ளும் உலக நாடுகள், சிறிதேனும் மனிதாபிமானத்துடனும் செயல்பட வேண்டும் என நெட்டிசன்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

ஈரானுக்கு வார்னிங்.. உடனே நிறுத்துங்க

சர்வதேச எரிபொருள் சந்தையில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதற்காக, ஈரானின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக வணிக கப்பல்களை பாதுகாப்பாக கொண்டு செல்ல ஒத்துழைப்போம் என, ஐரோப்பாவின் முக்கிய நாடுகள் மற்றும் ஜப்பான் ஆகியவை கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன. அதில், ஈரானின் தாக்குதலை கண்டிப்பதாகவும், இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாக அந்நாடு நிறுத்த வேண்டும் என்றும், பிரிட்டன், ஃப்ரான்ஸ், ஜெர்மன், இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக பயணிக்கும் கப்பல்களை தாக்க கன்னி வெடிகள், ஆளில்லா ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் போன்ற அச்சுறுத்தல்களை பின்பற்றுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று எச்சரித்துள்ளன.

சர்வதேச அமைதிக்கான பாதிப்பு

மேலும், “சர்வதேச கப்பல் போக்குவரத்தில் மேற்கொள்ளும் இத்தகைய தலையீடும், உலகளாவிய எரிபொருள் விநியோக சங்கிலியிலும் ஏற்படுத்தப்படும் இடையூறுகளும் சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமைகின்றன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவ தாக்குதலை தொடர்ந்து, ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஜலசந்தி கடந்த 20 நாட்களாகவே மூடப்பட்டே உள்ளது. மேலும், பதிலடி தரும் விதமாக தெஹ்ரான் நடத்திய தாக்குதலில் 10 எண்ணெய் கப்பல்கள் உட்பட 23 வர்த்தக கப்பல்கள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உலகின் 20 சதவிகித கச்சா எண்ணெய் வணிகம் நடைபெறும் ஹார்மூஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால், பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களின் விலை உயரும் சூழல் நிலவுகிறது.

ட்ரம்புடன் கைகோர்க்கும் உலக நாடுகள்..

வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்காக ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க உதவுமாறு உலக வல்லரசுகளுக்கும், நேட்டோ நாடுகளுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்தார். ஆனால், பல நாடுகள் அதனை உடனடியாக நிராகரித்ததோடு,  பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்தனர். ஆனால், தற்போது நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதால், ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக வணிக கப்பல்களை பாதுகாப்பாக கொண்டு செல்ல ஒத்துழைப்போம் என ஐரோப்பிய மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் அறிவித்துள்ளன.

”சுயநலம் தான் சார் உலகமே”

ஐரோப்பிய நாடுகளின் கூட்டறிக்கையானது, போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என விரும்பும் நடுநிலையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான சமூகவலைதள பதிவுகளில், “ஒரு நாட்டின் இறையான்மையையே சிதைக்கும் விதமாக ஈரானின் உச்சபட்ச தலைவர் மீது தாக்குதல் நடத்தி கொன்ற, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு ஒரு கண்டனம் கூட இந்த உலக தலைவர்களால் தெரிவிக்க முடியவில்லை. ஆனால், தங்களை பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கும் ஈரானை மட்டும் கண்டிப்பது என்ன நியாயம்? அந்நாட்டில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு, ஐக்கிய நாடுகள் சபையால் கவலை கூட தெரிவிக்க முடியவில்லை. ஆனால், வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையில் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றுகிறது. இதுபோக தங்கள் நாட்டின் மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி, அமெரிக்கா, இஸ்ரேலுடன் கைகோர்த்து கண்டனம் தெரிவிக்க ஐரோப்பிய நாடுகள் முன்வந்துள்ளன. இதெல்லாம் என்ன நியாயம்?” என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பிஞ்சுகள் செத்து மடிந்தது எதற்காக?

  • ”அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய முதல் நாள் தாக்குதலிலேயே, 160-க்கும் அதிகமான பள்ளி மாணவிகள் கொல்லப்பட்டதற்கு இந்தியா உட்பட எந்த உலக நாட்டின் தலைவர்களும் வாய் திறக்காதது ஏன்?
  • அமெரிக்காவிற்கு பதிலடி தரும் விதமாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீது மட்டும் தானே ஆரம்பத்தில் ஈரான் தாக்குதல் நடத்தியது. அவர்களது எண்ணெய் வளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் வரை, கத்தார் உள்ளிட்ட  நாடுகளின் எண்ணெய் வளங்கள் மீது தெஹ்ரான் தாக்குதல் நடத்தவில்லையே? எனில் தற்போதைய சூழலுக்கு யார் காரணம்?
  • ஈரானால் தங்களது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக இஸ்ரேலும், அவர்களது எண்ணெய் வளங்களை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்காவும் இந்த போரை தொடங்கியுள்ளது. அதனை தவறு எனவும், போரை நிறுத்துங்கள் என்றும் எந்த நாட்டு தலைவரும், அ.நா., சபையும் கண்டனம் தெரிவிக்காதது ஏன்?
  • ஆனால், தங்களை பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கும் ஈரான் மட்டும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என உலக நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் நிர்பந்திப்பது சரியா?
  • லெபானான் நாட்டிற்குள்ளே புகுந்து அதிபரை கைது செய்ததற்காவும், ஈரான் உச்சபட்ச தலைவரை சொந்த நாட்டிலேயே வைத்து கொலை செய்ததற்காகவும், அமெரிக்காவிற்கு எதிராக ஒரு கண்டன தீர்மானத்தை கூட ஐக்கிய நாடுகள் சபை நிறைவேற்றாதது ஏன்?
  • உடனடியாக தாக்குதலை நிறுத்த வேண்டும் என ஈரானை எச்சரிப்பதன் மூலம், உலக நாடுகளின் நன்மைக்காக தெஹ்ரான் தங்களை சுயமாக முன்வந்து தியாகம் செய்ய வேண்டும் என உலக தலைவர்கள் விரும்புகிறார்களா?
  • ஈரான் வளைகுடா மீது நடத்தும் தாக்குதல்களை யாரும் நியாயப்படுத்தவில்லை. ஆனால், அதன் மூலம் எழும் சர்வதேச அழுத்தங்களால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தும் என, தெஹ்ரான் எதிர்பார்ப்பது அவர்களது கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால் சரியானது தானே?” என ஏராளான கேள்விகளை நெட்டிசன்கள் அடுக்குகின்றனர். 
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.