எம்எல்ஏ சீட் ரூ. 3 கோடி.! திமுக நிர்வாகிக்கு வந்த வாட்ஸ் அப் அழைப்பு- சிக்கிய 3 பேர் யார்.? தேனியில் நடந்தது என்ன.?
கு. அஜ்மல்கான் March 20, 2026 11:14 AM

நெருங்கும் தேர்தல்- வேட்பாளர் தேர்வு தீவிரம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக வேட்பாளர் நேர்காணலை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி லிஸ்டும் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திமுகவில் போட்டியிட சீட் வழங்க 3 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என பேரம் நடத்தி மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி திமுக நகர் மன்ற உறுப்பினராக உள்ள சுதாவின் கணவர் நாகலிங்கம் (50).இவர் 2026 சட்டமன்ற தேர்தலில் பெரியகுளம் தனித் தொகுதியில் எம்எல்ஏ பதவிக்கு திமுக தலைமையில் விருப்ப மனு அளித்திருந்தார்.

எம்எல்ஏ சீட் - 3 கோடி பேரம்

கடந்த வாரம் இவரது மொபைலிற்கு வாட்ஸ் அப் மூலம் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் திமுக தலைமையில் இருந்து பேசுவதாகவும், பெரியகுளம் தனித்தொகுதியில் போட்டியிட 3 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும், உங்களால் தர முடியும் என்றால் சீட் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பிய நாகலிங்கம் பணம் கொடுக்க தயார் என தெரிவித்துள்ளார். அப்படியென்றால் முதல் கட்டமாக 1.30 கோடியை ஓ.பன்னீர் செல்வத்தின் நெருங்கிய ஆதரவாளரான பெரியகுளத்தை சேர்ந்த அபுதாகிரிடம் வழங்குமாறு கூறியுள்ளனர். இதனை நம்பிய நாகலிங்கமும் நகைகளை அடகு வைத்து பணத்தை அபுதாகிரிடம் கொடுத்துள்ளார். 

வாட்ஸ் அப் கால் அழைப்பில் பேரம்

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு புதிய செல்போன் எண்ணிலிருந்து இவருக்கு வாட்ஸ் அப் பில் அழைப்பு வந்துள்ளது.அதில் திமுக தலைமையில் இருந்து தொடர்பு கொள்வதாகவும்,தனித் தொகுதியில் போட்டியிட ரூபாய் மூன்று கோடி பணம் கொடுக்க வேண்டும் என்றும் உங்களால் தர முடியுமா என்றும். கேட்டுள்ளனர்.அதற்கு நாகலிங்கம் தன்னால் பணத்தை தயார் செய்து தர முடியும் என்று கூறியுள்ளார். மீதமுள்ள பணத்தை வேட்பாளர் பெயர் அறிவிப்புக்கு பின் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த 15ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், அடுத்த நாள் திடீரென ஏற்பட்ட சந்தேகத்தின் பெயரில் அடுத்த நாள் அபுதாகிரை தொடர்பு கொண்ட போது பணத்தை பெரிய குளத்தைச் சேர்ந்த திமுக வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு பிரிவு துணை அமைப்பாளர் கார்த்திகிடம் கொடுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். 

1.30 கோடி ரூபாய் மோசடி

இதனால் சந்தேகம் அடைந்த நாகலிங்கம் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் முன்னுக்குப் பின் முரணாக தொடர்ந்து பதிலளித்து வந்துள்ளார்.இதனால் தனது பணத்தைத் திரும்ப அளிக்கும்படி அபுதாஹீரிடம் நாகலிங்கம் கேட்டுள்ளார்.இதற்கு அபுதாஹீர் தர மறுத்துள்ளார்.இதனால் தான் ஏமாற்றப்பட்டதை நாகலிங்கம் உணர்ந்துள்ளார். இதுகுறித்து தென்கரை காவல் நிலையத்தில் நாகலிங்கம் புகார் அளித்தார்.காவல்துறையினர் நடத்திய விசாரணையில், வாட்ஸப் மூலம் தொடர்பு கொண்டு பேசியது அதே பகுதியைச் சேர்ந்த செல்போன் கடை உரிமையாளர் ஆசிப் ராஜா என்பதும், அவருடன் சேர்ந்து அபுதாஹீர் மற்றும் கார்த்திக் ஆகிய மூன்று பேரும் திட்டமிட்டு நாகலிங்கத்தை ஏமாற்றி மோசடி செய்ததும் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த தென்கரை காவல்துறையினர் ஆசிப்ராஜா மற்றும் கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர்.மோசடி செய்து பெற்ற பணத்தை மூன்று பேரும் பங்கு பிரித்த நிலையில்,முதல் கட்டமாக இதில் ரூபாய் 80 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.