போர் பதற்றம் காணமாக சமையலுக்கு அன்றாடம் பயன்படுத்தும் சமையல் எண்ணெய் விலை கடந்த 2 வாரங்களாக திருச்சியில் கடுமையாக உயர்ந்து வருகிறது. ஒரு லிட்டர் ரீபைண்ட் ஆயில் முன்பு ரூ.155-க்கு விற்கப்பட்டது. தற்போது லிட்டருக்கு ரூ.20 முதல் ரூ.25 வரை விலை உயர்ந்து ரூ.180 முதல் ரூ.190 வரை விற்கப்படுகிறது. பாமாயில் லிட்டர் ரூ.110-லிருந்து ரூ.122 ஆக உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனையில் இன்னும் அதிகமாக உள்ளது. கடலை எண்ணெய் ரூ.200 வரை விற்கப்படுகிறது.
இந்நிலையில் பெட்ரோலிய மூலப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் சாதனங்களின் விலையும் உயர்ந்து உள்ளது. அந்த வகையில் தற்போது குடிநீர் அடைத்து விற்பனை செய்யப்படும் தண்ணீர் பாட்டில்கள் விலையும் உயர்ந்து உள்ளது. இதுவரை ஒரு லிட்டர் ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் ரூ.25 ஆக உயர்ந்துவிட்டது.
இதுவரை ரூ.8-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 200 மில்லி லிட்டர் குடி நீர் பாட்டில் விலை இப்போது ரூ.10-க்கும், ரூ.10-க்கு விற்பனை செய்யப் பட்டு வந்த 300 மி.லி. குடிநீர் பாட்டில் ரூ.12-க்கும், ரூ. 12-க்கு விற்பனை செய்யப்பட்டுவந்த 500 மி.லி. குடிநீர் பாட்டில் ரூ.16-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
குடிநீர் பாட்டில் மற்றும் அதன் மூடி ஆகியவற்றை தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களின் கொள்முதல் விலை உயர்வு காரணமாக தண்ணீர் பாட்டில்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக தண்ணீர் பாட்டில் தயாரிப்பாளர்கள் கூறினர்.