மேற்காசியப் போரில் ஈரான் தனது ராணுவ பலத்தை உலக நாடுகளுக்கு நிரூபிக்கும் வகையில், சுமார் 4,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை நோக்கி ஏவுகணைகளை ஏவி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை அதிர வைத்துள்ளது. இதுவரை ஈரானிடம் அதிகபட்சமாக 2,000 கி.மீ. தொலைவு வரை பாயும் ஏவுகணைகளே இருப்பதாகக் கருதப்பட்ட நிலையில், நேற்று ஈரான் நடத்திய தாக்குதல் அந்த மதிப்பீடுகளைத் தலைகீழாக மாற்றியுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அமெரிக்கா - பிரிட்டன் கூட்டு ராணுவத் தளம் (டியாகோ கார்சியா) ஈரானில் இருந்து சுமார் 4,000 கி.மீ. தொலைவில் உள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் இரண்டு ஏவுகணைகளை ஈரான் ஏவியது. ஒரு ஏவுகணை தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தோல்வியடைந்தது. மற்றொரு ஏவுகணை அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்புகளால் நடுவானில் இடைமறிக்கப்பட்டது. ஈரானின் இந்தத் தாக்குதல் முயற்சி உலக நாடுகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் தன்னிடமுள்ள ஏவுகணைகளின் உண்மையான வீச்சை மறைத்து வைத்திருந்தது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 4,000 கி.மீ. தொலைவைத் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள் மூலம் ஈரான் இப்போது ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் தனது தாக்குதல் எல்லைக்குள் கொண்டு வந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்காவின் ரேடார்களில் சிக்காத அதிநவீன எப்-35 (F-35) போர் விமானத்தை ஈரான் தாக்கி அழித்தது ஏற்கனவே உலக நாடுகளைத் திகைக்க வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவரது குடும்பத்தினர் மற்றும் முக்கிய ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டனர். இந்தப் போரில் இதுவரை ஈரானில் பெண்கள், குழந்தைகள் உட்பட 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தனது தலைவர்கள் கொல்லப்பட்டதற்கும், நாட்டில் ஏற்பட்ட சேதத்திற்கும் பதிலடியாகவே ஈரான் தற்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வெளிநாட்டுத் தளங்களை இலக்கு வைத்து வருகிறது.