“ஊழலை ஒழிப்பதே விஜயின் நோக்கம்” - செங்கோட்டையன்
Top Tamil News March 22, 2026 12:48 PM

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகமே வியக்கும் பல்வேறு அறிவிப்புகள் வெளி வர உள்ளது. ஊழல் என்ற நிலையை மாற்றி அமைப்பது விஜய் நோக்கமாக உள்ளதாக தவெக பொறுப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.


கோபி அருகே உள்ள நம்பியூரில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசும் போது, “தமிழகத்தை இது வரை ஆட்சி செய்தவர்கள் சிறப்பாக பணியாற்றவில்லை, அதன் காரணமாகவே இரு திராவிட இயக்கங்களும் 23 கட்சிகளும் தவெகவை தாக்கி பேசுகின்றன. தமிழகத்தில் புத்துணர்ச்சியோடு தூய ஆட்சியை உருவாக்க விஜய் புறப்பட்டு உள்ளார். தமிழக மக்கள் மனதில் விஜய் நீக்கமற நிறைந்து உள்ளதை காண முடிகிறது. சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட சமத்துவம் நிலை பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு பல்வேறு கருத்துகளை விஜய் முன் வைத்து வருகிறார்.

குறிப்பாக விவசாயிகள், கருப்பட்டி உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான திட்டங்களை நிறைவேற்றி, நல்லாட்சி வழங்க உள்ளார். எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்ற இலக்கை அடைய தடையாக இருக்கும் ஊழல் என்ற நிலையை முற்றிலும் மாற்றி அமைப்பதே விஜய் நோக்கமாக உள்ளது. மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு 10 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். அதே போன்று வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகமே வியக்கும் வகையில் இன்னும் பல அறிவிப்புகள் வர உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்று கோட்டையில் தவெக தலைவர் விஜய் தேசிய கொடியை ஏற்றி வைப்பார்" என்றார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.