ஹாங்காங்கிலிருந்து லண்டன் நோக்கி பயணித்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில், 60 வயது மதிக்கத்தக்க பெண் பயணி ஒருவர் புறப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே உயிரிழந்தார். விமானம் நடுவானில் இருந்தபோது இந்த துயரம் நிகழ்ந்தாலும், உயிரிழப்பு மருத்துவ அவசரநிலையாக கருதப்படாததால் விமானிகள் பயணத்தை தொடர முடிவெடுத்தனர். சுமார் 13.5 மணிநேர பயணத்தின்போது, அப்பெண்ணின் உடல் விமானத்தின் பின்புற கேலரி பகுதியில் வைக்கப்பட்டது.
துரதிர்ஷ்டவசமாக, அந்த பகுதியின் தரைத்தளம் வெப்பமூட்டும் வசதி கொண்டது என்பதை ஊழியர்கள் கவனிக்க தவறினர். இதனால் நீண்ட நேர பயணத்தில் உடலில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியது, இது விமானத்தில் இருந்த 331 பயணிகளையும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கியது.
லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும், காவல்துறையினர் சுமார் 45 நிமிடங்கள் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தின்போது அனைத்து விதிகளும் சரியாக பின்பற்றப்பட்டதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விளக்கம் அளித்துள்ளது.
பொதுவாக இதுபோன்ற சூழல்களில் உடலை போர்வையால் மூடி, காலியாக உள்ள இருக்கைகளில் வைப்பது சர்வதேச விதியாகும். ஆனால், விமானம் முழுமையாக நிரம்பியிருந்ததால் இந்த இக்கட்டான சூழல் ஏற்பட்டதாக தெரிகிறது.
Edited by Siva