உலகப்புகழ் பெற்ற கொல்லங்கோடு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் தூக்கத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான 'நோ்ச்சைத் தூக்கம்' இன்று நடைபெறுவதை முன்னிட்டு, பொது அமைதியைப் பேண மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா விடுத்துள்ள உத்தரவின்படி, திருவிழா நடைபெறும் பகுதிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் மட்டும் மதுபான விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நித்திரவிளை, கொல்லங்கோடு, நடைக்காவு மற்றும் ஊரம்பு ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகள், அவற்றுடன் இணைந்த பார்கள் மற்றும் கொல்லங்கோட்டில் உள்ள 'ஹோட்டல் ஒயாசிஸ் இன்டர்நேஷனல்' தனியார் மதுபான பார் ஆகியவைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள் 2003, பிரிவு 12(2)-ன் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுமார் 40 அடி உயரமுள்ள மரத்தாலான வில் போன்ற அமைப்பில் (தூக்க வில்), 'தூக்கக் காரர்கள்' குழந்தைகளைத் கைகளில் ஏந்தியபடி உயரே தூக்கிச் சுமந்து கோயிலைச் சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது இத்திருவிழாவின் சிறப்பம்சமாகும். கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என்பதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கக் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாவட்ட ஆட்சியரின் இந்த உத்தரவை மீறி ரகசியமாக மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் அல்லது விதிகளை மீறிப் பார்களைத் திறந்து வைப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.